logo
அதிமுக-பாஜக கூட்டணி தமிழக மக்களுக்கு ஆபத்தான கூட்டணி-ஜிராமகிருஷ்ணன் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி தமிழக மக்களுக்கு ஆபத்தான கூட்டணி-ஜிராமகிருஷ்ணன் பேச்சு

24/Mar/2021 05:12:25


புதுக்கோட்டை, மார்ச்: அதிமுக-பாஜக கூட்டணி தமிழக மக்களுக்கு ஆபத்தான கூட்டணி என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.


கந்தர்வகோட்டை தொகுதிக்குள்பட்ட குன்றாண்டார்கோவில் ஒன்றியம் வீரப்பட்டியில் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரையின் தேர்தல் பிரசாரப் பயணத்தை புதன்கிழமையன்று தொடங்கி வைத்தார். பின்னர், புதுக்கோட்டை தொகுதியில் வ.உ.சி நகரில் திமுக வேட்பாளர் வை.முத்துராஜாவை ஆதரித்தும், மாலையில் சத்தியமங்கலம், மேலூர் அகிய இடங்களில் கந்தர்வகோட்டை சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்குகள் சேகரித்து மேலும் அவர் பேசியது: 


விவசாயிகளை, தொழிலாளர்களை, தமிழ்ப்பண்பாட்டை, தமிழக மக்களை பாதுகாப்பதற் காக அமைக்கக்பட்டது திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. அதிமுக-பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் தமிழுக்கு ஆபத்து ஏற்படும். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் இந்தியில் வெளியிடப்படுகிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற திட்டத்தோடு பாஜகவினர் தேச ஒற்றுமையை சிதைக்கப் பார்க்கின்றனர்.


மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்துவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவானவர் என கதைவிடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மனுக்கொடுக்கச் சென்றவர்களை சுட்டுத் தள்ளியதில் 13 பேர் உயிரிழந்தனர். சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் காவல்நிலையத்திலேயே படுகொலை செய்யப்பட்டனர். இவ்வளவும் செய்துவிட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது என்கிறார். 


மத்திய அரசு உருவாக்கிய கல்விக்கொள்கையில் கல்வி தனியார்மயமாக்கப்படும் என்கிறது. இதை அதிமுக ஆதரிக்கிறது. கோவில் நிர்வாகத்தை பூசாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது பாஜக தேர்தல் அறிக்கை. ஆகவேதான் சொல்கிறோம் அதிமுக-பாஜக ஆபத்தான கூட்டணி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களை இதே கூட்டணி வெற்றிபெற்றது. அப்பொழுது இருந்ததைவிட இந்த ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமாகியுள்ளது. அதானால், தமிழகத்தில் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும்.


புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம்  ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: ஐநா மன்றத்தில் நேற்று நடந்த இலங்கை போர் குற்றம் தொடர்பாக வாக்கெடுப்பில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவது பட்டவர்த்தனமாக தெரிகிறது.


தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகள் மற்றும் பணப் பட்டுவாடா தொடர்பாக  முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதிமுக-பாஜக எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசுவதை கண்கூடாக காண முடிகிறது. திமுக கூட்டணி மதச்சார்பற்ற தன்மையையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்கும். கேரளாவில் பிரணாயி விஜயன் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி தொடர்ச்சியாக இரண்டுமுறை வெற்றி என்ற மகத்தான சாதனையைப் படைக்கும். தேர்தல் கணிப்புகள் அதைத்தான் தெரிவிக்கிறது என்றார். 


Top