17/Nov/2025 06:04:51
புதுக்கோட்டை: சிங்கப்பூரில் பணியின்போது மின்னல் தாக்கி புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த மதியழகன் மகன் செந்தூரன்(25).தொழிற்கல்வி படித்துள்ள இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை கட்டடத்தில் வேலை பார்த்தேக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி செந்தூரன் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கப்பூரில் செந்தூரன் வேலைபார்த்து வந்த நிறுவனத்தினர் அலைபேசி மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் பெருந்துயரடைந்துள்ளனர். செந்தூரன் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தி இழப்பீடு பெற்றுத்தருவதோடு, அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென செந்தூரன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.குடும்ப சூழலுக்காக வெளிநாடு வேலைக்கு சென்று இளைஞர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.