logo
சிங்கப்பூரில் உயிரிழந்த இளைஞரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

சிங்கப்பூரில் உயிரிழந்த இளைஞரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

19/Nov/2025 09:39:22

புதுக்கோட்டை: சிங்கப்பூரில் மின்னல் தாக்கி உயிரிழந்த புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதி இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.


ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி சேர்வைகாரன்பட்டியைச் சேர்ந்த மதியழகன் மகன் செந்தூரன்(25).தொழிற்கல்வி படித்துள்ள இவர்,  சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு உள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வந்த அவர், திங்கள்கிழமை ஒரு கட்டடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி செந்தூரன் அந்த இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கப்பூரில் அவர் வேலைபார்த்து வந்த நிறுவனத்தினர் கைப்பேசி மூலம்  அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்கள் பெருந்துயரடைந்தனர்.மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞரின் வீட்டிற்கு சென்ற மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார்.

அப்போது,  தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர்  வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு சார்பில் பேசி உயிரிழந்த செந்தூரனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞரின் உடல் நாளை பிற்பகல்  சிங்கப்பூரிலிருந்து  விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Top