logo
பேய் ஓட்டுவதாக கூறி பிரம்பால் அடித்ததால் வாலிபர் உயிரிழப்பு: 6 மாதங்களுக்கு பின் சாமியார் கைது

பேய் ஓட்டுவதாக கூறி பிரம்பால் அடித்ததால் வாலிபர் உயிரிழப்பு: 6 மாதங்களுக்கு பின் சாமியார் கைது

20/Dec/2020 08:46:15

சென்னை, டிச: பேய் ஓட்டுவதாக சாமியார் பிரம்பால் அடித்ததால் வாலிபர் உயிரிழந்தார். 6 மாதங்களுக்குப் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என தெரிய வந்ததால் சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம், 2- ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவரது கணவர் மகபூப்பாஷா ( 29). இவர் மனநலம் பாதிப்படைந்ததால் பேய் பிடித்திருப்பதாக கூறி தர்காவில் வைத்து மந்திரம் ஓதியுள்ளனர். ஆனால் மகபூப்பாஷாவுக்கு உடல் நலம் சரியாகவில்லை. அதனையடுத்து ஆயிஷாவின் உறவினர் வீடான செங்குன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்குள்ள பொத்துார் அம்மன் கோவில் தெருவில் உள்ள சங்கர் என்ற சாமியாரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு சுமார் 10 நாட்கள் வரை மகபூப்பாஷாவை தங்க வைத்தனர். அப்போது சாமியார் மகபூப்பாஷாவுக்கு பேய் பிடித்துள்ளதாகவும், பேயை விரட்டுவதாகவும் கூறி பிரம்பால் அடித்துள்ளார். அப்போது மகபூப்பாஷாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த ஜுன் மாதம் 9-ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மகபூப்பாஷா பிரம்பால் தாக்கப்பட்டதில் உள்காயம் ஏற்பட்டதில் உடலில் பாதிப்பு ஏற்பட்டு இறந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் 6 மாதங்களுக்குப் பின் இவ்வழக்கில் மகபூப்பாஷாவை பிரம்பால் தாக்கிய சாமியார் சங்கரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Top