logo
2-ஆவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்:ஏ.டி.எம்.மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதி

2-ஆவது நாளாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்:ஏ.டி.எம்.மையங்களில் பணம் இல்லாததால் மக்கள் அவதி

16/Mar/2021 05:49:11

ஈரோடு, மார்ச்:  ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர்ந்த  வங்கி ஊழியர்களின் வேலை  நிறுத்தம் காரணமாக ஏ.டி.எம்.மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பொதுத்துறை களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், சங்க கூட்டமைப்பு, அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அலுவலர் களின் கூட்டமைப்பின் சார்பில் இரண்டு நாட்கள் (மார்ச்.15,16 )வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி திங்களிகிழமை  வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 217 தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் ஊழியர்கள் அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும்  பண பரிவர்த்தனை, காசோலை  என வங்கியின் சேவைகள் அனைத்தும்  முடங்கியது. முதல் நாளில் மட்டும் ரூ. 600 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை  2-ஆவது நாளாக வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் சொந்தமான 360 ஏ.டி.எம்.களில் கடந்த 12- ஆம் தேதி நிரப்பப்பட்ட பணம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் எடுக்கப்பட்டு விட்டது.

இதனால் செவ்வாய்க்கிழமை  காலை முதல் பெரும்பாலான ஏ.டி.எம்.களில்   பணம்  இல்லை. பல்வேறு அவசியத்தேவைகளுக்காக பணம் எடுக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 பணம் இருந்த ஒரு சில ஏ.டி.எம் மையங்களில் முன்பு மக்கள் கூட்டம்  நீண்ட வரிசையில்  காத்திருந்து எடுத்துச்சென்றனர். சில மணி நேரத்தில்  பணம் காலியானதால்  மக்கள்  பணத்துக்காக பல்வேறு மையங்களுக்கு அலைந்து திரிந்து  மிகவும் சிரமப்பட நேரிட்டது.


Top