logo
ஈரோட்டில் செல்போன் பேசியவரை கத்தியால் குத்திய வாலிபர்: தீயணைப்பு துறையினர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஈரோட்டில் செல்போன் பேசியவரை கத்தியால் குத்திய வாலிபர்: தீயணைப்பு துறையினர் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

30/Nov/2020 11:22:03

ஈரோடு: ஈரோட்டில் சாலையோரம் நின்று செல்போன் பேசியவரை கத்தியால் குத்திய வாலிபரை, தீயணைப்பு துறை வீரர்கள் விரட்டி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம் வெங்கமேடு காமராஜ் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜய்(24). அம்மிகல், ஆட்டுகல் உற்பத்தி செய்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா(21). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விஜய் ஈரோட்டில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று மாலை கரூரில் இருந்து அவரது டூவீலரில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஈரோடு வந்து கொண்டிருந்தார். ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் முன்புறம் வந்து, சாலையோரம் டூவீலரை நிறுத்தி விட்டு, மனைவி, குழந்தைகளை விட்டு சற்று தள்ளி விஜய் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு நின்றிருந்த மர்மநபர் ஒருவர் திடீரென அவர் பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியால் விஜயை கழுத்தில் குத்தினார். இதில், விஜய் செய்வதறியாது ரத்த வெள்ளத்தில் திகைத்து நின்றார். இதைப்பார்த்த விஜய்யின் மனைவி, குழந்தைகள் கூச்சல்போட்டனர். சத்தம் கேட்டு அருகில் இருந்த தீயணைப்பு துறை வீரர்கள் வருவதை பார்த்த அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடினர். 

அந்த நபரை தீயணைப்பு துறையினர் விரட்டி பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், காயம் பட்ட விஜயை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கத்தியால் குத்திய மர்மநபரை ஈரோடு தெற்கு போலீசார் பிடித்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 

இதில், அந்த நபர் ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் குணா என்ற குணசேகரன்(35) என்பது தெரியவந்தது. விஜய்க்கும், குணசேகரனுக்கும் எவ்வித முன்விரோதமும் இல்லை என்றும், மதுபோதையில் இருந்ததால் குத்தியிருக்கலாம் எனவும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் தீயணைப்பு நிலையம் பகுதியில் நேற்று மாலை பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Top