logo
அறிவு மதிப்பெண் பெறும் கருவியல்ல அற்றம் காக்கும் கருவி- கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

அறிவு மதிப்பெண் பெறும் கருவியல்ல அற்றம் காக்கும் கருவி- கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

10/Feb/2021 01:26:08

புதுக்கோட்டை, பிப்: அண்ணாசிலை, தனியார் மருத்துவமனை எதிர்மாடியில் செயல்படும் சங்கத்தமிழ் ஐஏஎஸ் அகாதெமியில் (9.2.2021) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத் தேர்வுகள் மற்றும் இதர போட்டிகளுக்கான தேர்விற்குத் தயாராகும் பயிற்சி மாணவர்களுக்கு வழிகாட்டி நூல்களை வழங்கிய தமிழ்நாடு அரசு பாடநூல் கழக மேனாள் உறுப்பினரும்,  எழுத்தாளரும் பேச்சாளருமான நா.முத்துநிலவன்  மேலும் பேசியதாவது:

ஐ ஏ எஸ் என்பதோ, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளோ, ஏழைகளுக்கு எட்டாக் கனியல்ல, பயிற்சியும் முயற்சியும் இருந்தால், சாதாரண ஏழை மாணவர்களும் அதை வெற்றி கொள்ள முடியும். தமிழ்வழியில் படித்த ஆர்.பாலகிருஷ்ணன், உ.சகாயம் போன்ற சாதனையாளர்கள் தமது கடும் உழைப்பாலும் பயிற்சியாலுமே ஆட்சிப்பணி அதிகாரிகளானார்கள். அரசுப் பாடநூல்களைச் சாறுபிழிந்து தந்திருக்கும் இந்த வழிகாட்டிகளைச் சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி ஒன்றும் கடினமல்ல, வெறும் கை என்பது மூடத்தனம், நம் விரல்கள் பத்தும் மூலதனம்- என்ற கவிஞர் தாரா பாரதியின் கவிதை உங்களை வழிநடத்தும்.


கல்லூரித் தேர்வில் தோல்வியடைந்தாலும் தனது தனித்திறனைத் தானே கண்டுபிடித்து, அதனை வளர்த்துக் கொண்ட பில்கேட்ஸ்தான் உலகின் பெரும் பணக்கார நாடான அமெரிக்காவின் ஆண்டு வரவுசெலவைவிட அதிகான வரவுசெலவு நடத்தும் மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரானார். அவரது கணினி அறிவு உலகின் அனைவரையும் சென்றடைந்த காரணம் அவரது விடா முயற்சியும் பயிற்சியுமே.


எனவே, மதிப்பெண்ணுக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை, முயற்சியும் பயிற்சியுமே உங்கள் வாழ்வை உயர்த்தும். அறிவுக்காகப் படிப்பவர்கள் தேர்விலும் வெற்றி பெறுவார்கள், நல்ல மதிப்பெண்ணும் பெறுவார்கள், வாழ்க்கையைப் புரிந்துகொண்டு பதவிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பைப் பெறுவார்கள். மாறாக மதிப்பெண்ணுக்காகவே படிப்பவர்கள், அறிவும் பெறமுடியாது நல்ல மதிப்பெண் பெறவும் இயலாது என்றார். இதையடுத்து நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

விழாவை அகாதெமியின் இயக்குனர்கள் உதயகுமார், ராமநாதன், வடிவேலு ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். இதில் நூற்றுக்கும்  மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

 

Top