logo
தாமரைக் குளம் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணி: அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் ஆய்வு

தாமரைக் குளம் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணி: அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் ஆய்வு

28/Nov/2020 10:50:15

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தாமரைக் குளம் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணியை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் சி.வி.சண்முகம் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அதில், விழுப்புரம் தாமரைக்குளம் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நகராட்சி ஆணையர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு உத்தரவிட்டார். 

அதனை தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி அலுவலகம், திண்டிவனம் நகராட்சி அலுவலகம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வளவனூர் பேரூராட்சி அலுவலகம், வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவலகம், மரக்காணம் பேரூராட்சி அலுவலகம், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நிவர் புயலினால் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நீர் வெளியேற்றும் இயந்திரம் கொண்டு மழைநீரை உடனடியாக வெளியேற்றவும், நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க பிளிச்சீங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் தெளிக்கவும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ஹர்மந்தர் சிங், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, சக்கரபாணி எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன், திண்டிவனம் சப்- கலெக்டர் அனு, விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத் தலைவர் வண்டிமேடு ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை முன்னாள் இணை செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Top