logo
 ஈரோட்டில் மேலும் 72 பேருக்கு  தொற்று: மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா

ஈரோட்டில் மேலும் 72 பேருக்கு தொற்று: மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா

24/Nov/2020 05:19:41

ஈரோடு: ஈரோட்டில் மேலும் 72 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளதால் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகம் எடுத்துள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்தது.தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி வைரஸ் தாக்கி வந்தது. குறிப்பாக முன்கள பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகள், போலீஸ்  உள்ளிட்டோரையும் தாக்கி வந்தது.  இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை வேகமாக கடந்தது. 

இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனை தினமும் 2,000 பரிசோதனைளாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நோய் பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றவர்களும் வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர்   எண்ணிக்கை 11 ஆயிரத்து 500 - ஐ தாண்டியது.

இந்நிலையில், தீபாவளிக்கு பிறகு மாவட்டத்தில்  கடந்த ஒரு வாரமாக தின சரி பாதிப்பு 50 -க்கு கீழ் குறைந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா  வைரஸ் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 58 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.

 இதனால் மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது. அதேநேரம் 47 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 559 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 303 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 139 பேர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு நாட்களாக மாவட்டத்தில் நோய் தாக்கம் அதிகரித்துள்ளது: 

இதற்கு முக்கிய காரணம் மக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது தான். பொது இடங்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியாகியுள்ளது. முக கவசங்களையும் முறையாக அணிவதில்லை. முதியவர்கள் குழந்தைகள் வெளியில் அதிக அளவில் நடமாடுகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து முதியவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்து வருகின்றனர்.

 இதனால் முதியவர்கள் வசிக்கும் வீட்டில் உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது ஆனால் இதை யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. கடைவீதி தெருக்களில் உள்ள கடைகளில் முதியவர்கள் சர்வசாதாரணமாக முக கவசம்  இன்றி  நடமாடுகின்றனர். இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் மேலும் வைரஸ் தாக்கம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


Top