logo
சத்தியமங்கலம்- மைசூர் இடையே 7 மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து சேவை தொடங்கியது

சத்தியமங்கலம்- மைசூர் இடையே 7 மாதங்களுக்கு பிறகு போக்குவரத்து சேவை தொடங்கியது

12/Nov/2020 10:32:51

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு தமிழக அரசு  போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ், தனியார் பஸ்கள்  இயக்கப்பட்டு வந்தன. அதைப்போல் கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் அரசு பஸ்கள் சத்தியமங்கலத்துக்கு இயக்கப்பட்டு வந்தன. இந்த பஸ்களில் வியாபாரிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.குறிப்பாக  ஜவுளி வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஈரோடு, கோவை பகுதிகளுக்கு  சென்று ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 20- ஆம் தேதியிலிருந்து சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பஸ்களும் நிறுத்தப்பட்டன.  தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மீண்டும் சத்தியமங்கலம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்க வேண்டும் என இரு மாநில வியாபாரிகள்,பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி 6 நாட்களுக்கு மட்டும் சத்தியமங்கலம்- கர்நாடக மாநிலம் மைசூர் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்தது. அதேபோல் கர்நாடகாவில் இருந்தும் சத்தியமங்கலத்துக்கு பஸ்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 7 மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.

 மூன்று அரசு பஸ்கள், இரண்டு தனியார் பேருந்துகள் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா  மாநிலம் மைசூருக்கு இயக்கப்பட்டது. அதைப்போல் மைசூரில் இருந்து சத்தியமங்கலத்தில் பஸ்கள் இயக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு முதல் பஸ் போக்குவரத்து சேவை தொடங்கியது. அதைத் தொடர்ந்து படிப்படியாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

பஸ்சில் வரும் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. முக கவசம் அணியாமல் வந்த பயணிகளுக்கு பஸ்சில் அனுமதி மறுக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 50 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

தனியார் பஸ்சில் வேப்பிலை கட்டப்பட்டிருந்தது. 12.11.2020 முதல் நாளில் பயணிகள் கூட்டம் இருந்தது. இதேபோல் தாளவாடியில் இருந்து கர்நாடகா சாம்ராஜ்நகர் பகுதிக்கும் இன்று முதல் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது. 


Top