logo
புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க  விவசாயிகளுக்கு யோசனை

புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு யோசனை

23/Nov/2020 08:03:56

புதுக்கோட்டை:   புயல் காற்றிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாக்க விவசாயிகள்  வேளாண்துறையினரின்   ஆலோசனைகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகம்  அறிவித்துள்ளது . 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: எதிர்வரும் நாட்களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யலாம் என்று வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிதீவிரமான வேகத்துடன் வீசும் புயற்காற்றிலிருந்து தென்னை மரங்களைப் பாதுகாப்பதற்கு  கீழ்கண்ட ஆலோசனைகள் பின்பற்ற வேண்டும்.

  

நல்ல காய்ப்பு உள்ள தென்னந்தோப்புகளில் முதிர்ச்சியடைந்த அல்லது முதிர்ச்சியடையும் தருவாயிலுள்ள இளநீர்க் காய்களைப் பலத்த காற்று வீசத் தொடங்குவதற்குள் அறுவடை செய்ய வேண்டும். தென்னை மரங்களில் தலைப்பகுதியின் அடிப்பாகத்தில் அதிக எடையுடன் காணப்படும் தென்னை ஓலைகளை வெட்டி அகற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால், தென்னை மரங்களில் தலைப்பகுதியின் எடை குறைந்து, வேகமாக வீசும் காற்று தென்னை மரங்களின் தலைப்பகுதிகளை எளிதாகக் கடக்க முடியும் என்பதால், தோப்புகளிலுள்ள தென்னை மரங்களைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.


வாய்ப்புள்ள இடங்களில், தென்னை மரங்களின் அடிப்பகுதியை மண்ணால் உயரமாக அணைக்க வேண்டும். இதனால் மரங்களுக்குக் கூடுதல் பலம் கிடைக்கும். உடனடியாகத் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதையும், உரமிடுவதையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் தென்னை மரங்களின் வேர்ப்பகுதி நன்கு இறுகி பாதிக்கப்படாமல் காற்றின் வேகத்தைத் தாங்கி நிற்கும். இதையும் மீறி, தென்னை மரங்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் விவசாயிகள் தங்கள் தென்னை மரங்களைக் காப்பீடு செய்துகொள்ளலாம். 


ஏற்கெனவே தொடர்ந்து அறிவுருத்தப்பட்டு வருவதைபோல் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்ய குட்டை மற்றும் ஒட்டு இரகத் தென்னை மரங்களை 4ஆம் ஆண்டு முதலும், நெட்டை இரக மரங்களை 7-ஆம் ஆண்டு முதல் 60-ஆம் ஆண்டு வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம். ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய நல்ல ஆரோக்கியமான மரங்களை இத்திட்டத்தில் சேர்க்கலாம். ஒரு எக்டருக்கு சுமார்; 175 தென்னை மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும். 4 அல்லது 7 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.2.25 -ம், 16 வயது முதல் 60 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு  ரூ.3.50 - ம் காப்பீட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.


காப்பீட்டுக் கட்டணத்திற்கான வரைவோலை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட், சென்னை என்ற நிறுவனத்தின் பெயரில் எடுக்க வேண்டும். 4 அல்லது 7 வயது முதல் 15 வயது உள்ள மரங்களுக்குக் காப்பீட்டுத் தொகை மரம் ஒன்றுக்கு ரூ.900-ம், 16 வயது முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1,750 -ம் ஆகும். காப்பீடு செய்வதற்கு முன்மொழிவுப் படிவத்துடன், ஆதார், அட்டை நகல், சிட்டா மற்றும் அடங்கல், புல எண் வரைபடம், விவசாயியின் புகைப்படம், வட்டார வேளாண்மை உதவி இயக்குநரின் காப்பீட்டுத் திட்டத்திற்கான சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதற் பக்க நகல், காப்பீட்டுக் கட்டணத்திற்கான வரைவோலையுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்  அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

எனவே, தென்னை விவசாயிகள் உடனடியாக மேற்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி, தங்களின் தென்னை மரங்களைப் பலத்த காற்றினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.



Top