logo
கொரோனா தொற்றும் இறுதி அஞ்சலியும்

கொரோனா தொற்றும் இறுதி அஞ்சலியும்

22/Apr/2020 04:29:58

வீட்டுக்கு வரும் விருந்தினர்களையோ,  உறவினர்களையோ வழி அனுப்பும்போது இன்முகத்தோடு "மீண்டும் சந்திப்போம்" என்று வழி அனுப்புதல் மனிதர் பண்பாடு.


அதேபோல், இறந்தவர்களை வழியனுப்பும்போது அவர்களை மரியாதையுடனும், கண்ணீருடனும் வழியனுப்புதல் அன்பின் அடையாளம்.

புற்று நோய், எய்ட்ஸ் நோய், காச நோய் போன்ற நோய் உள்ளவர்களையும் அரவணைத்து அக்கறை காட்டிய நாம், கரொனா நோயால் பாதித்தவர்களை ஏற்க மறுப்பதும், அதனால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி செய்வதை இடையூறு செய்வதும் மனிதநேயமற்ற செயல்.

இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட மனநல திட்ட அலுவலர் ஆர்.கார்த்திக் தெய்வநாயகம் கூறியதாவது:

கரொனா நோயால் இறந்தவர்களின் உடலை எவ்வாறு கையாளப்பட வேண்டும்?, அடக்கம் செய்ய வேண்டும்? என்பதை உலக சுகாதார நிறுவனம் தெளிவாக கூறியுள்ளது.

மேலும், கரோனா வைரஸ் தொற்று நோயால் இறந்தவர்களின் உடலை அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ப எரிக்கவோ, புதைக்கவோ செய்யலாம். இறந்தவர்களின் உடலில் இருந்து நேரடி, நெருங்கிய தொடர்பு இல்லாதவர்களுக்கு நோய் தொற்றிக்கொண்டதாக ஆக்கபூர்வமான அறிவியல் ஆதாரம் இல்லை. பயப்பட வேண்டியதில்லை.

இறந்தவர்களின் உறவினர்களது உணர்வுகளையும், சம்பிரதாய சடங்குகளையும் மதிக்க வேண்டும். உறவினர்கள் உடலை பார்க்க விரும்பினால், அவர்களும் கைகளை சுத்தமாக கழுவி, வாய் மற்றும் கண்களுக்கு கவசம் அணிந்து, குறைந்தது ஓரு மீட்டர் தள்ளி நின்று பார்க்க அனுமதிக்க வேண்டும்.

உடலை தொடுவதையோ, முத்தமிடுவதையோ தவிர்க்க வேண்டும். முக்கியமான ஒரு சில உறவினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 60 வயதைக் கடந்த முதியோர்கள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு அருகே நெருங்கி செல்வதை தவிர்க்க வேண்டும்.

இறந்தவரின் உடலை கையாள்பவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். கையுறை, கை கழுவுதல், முகக் கவசம் போன்ற தற்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழக்கம் போல கடை பிடிக்க வேண்டும். அதேபோல குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பும் முக்கியம்.

அதிகாரிகள் ஒவ்வொரு மரணத்தையும் தனிக்கவனத்தோடு கையாள வேண்டும். இறந்தவரின் உரிமை, குடும்ப உறுப்பினர்களின் விருப்பம், உடலை கையாள்பவர்களின் பாதுகாப்பு, தொற்று தடுப்பு நடவடிக்கை என பலவற்றையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் சீரான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, மருத்துவத் துறையை சார்ந்தவர்களும் மற்ற அரசு ஊழியர்களும், கரொனா நோயால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வரும்போது இறந்தவரையும் மனதிற்குள் வணங்கி மரியாதை செலுத்தி நாம் மனிதநேயம் உள்ள மனிதர்கள் என்பதை நிரூபிப்போம்.

மனிதர்களாக வாழ்வோம்.மனித நேயத்தை வெளிப்படுத்துவோம். கரோனா நோய் பற்றிய வதந்திகளை புறந்தள்ளுவோம். அறிவியல் பூர்வமான செய்திகளை பரப்புவோம் என்றார்.

Top