logo
பெருந்துறையில் கம்பிவேலி அமைக்க முயற்சியைக்கண்டித்து மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

பெருந்துறையில் கம்பிவேலி அமைக்க முயற்சியைக்கண்டித்து மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

19/Oct/2020 10:51:38

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே  சிப்காட் தொழிற்பேட்டையொட்டி அமைந்துள்ள எழுதிங்கள்பட்டி கிராமத்தைச் சுற்றி சிப்காட் நிர்வாகம் கம்பிவேலி அமைக்கும் முயற்சியைக் கண்டித்து கிராமமக்கள் கருப்புக்கொடி ஏற்றி வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

       ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள சிப்காட் தொழிற்பேட்டை 3,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பேட்டையில் 400-க்கும் மேற்பட்ட பலதரப்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தொழிற்பேட்டையை சுற்றி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொழிற்பேட்டையையொட்டி அமைந்துள்ள எழுதிங்கள்பட்டி கிராமத்தைச் சுற்றி கம்பிவேலி அமைக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சிப்காட் நிர்வாகத்தின் நடவடிக்கையைக் கண்டித்து அக்கிராம மக்கள் தங்களது வீடுகள் மற்றும் சாலைகளில் கருப்புக்கொடி ஏற்றி வைத்து கம்பிவேலி அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: எழுதிங்கள்பட்டி கிராமத்தைச் சுற்றி கம்பிவேலை அமைக்கப்பட்டால் கிராமத்திற்கும், தொழிற்பேட்டைக்கும் எந்த தொடர்புமில்லாத நிலை ஏற்படும் என்றும், சிப்காட் வளாகத்திற்குள்ள பாதையை கிராம மக்கள் தங்களது தினசரிப் போக்குவரத்துப் பாதையாக பயன்படுத்தி  பெருந்துறைக்கும், பெருந்துறை பிரதான சாலையை சென்றடையும் சாலையாக பயன்படுத்தி வருகிறோம்.

மேலும், சிப்காட் தொழிற்பேட்டையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பல்லாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது கிராமத்தில் வாடகைக்கு குடியிருந்து வருவதாகவும், அவர்கள் சிப்காட்டிற்குள் வேலைக்கு செல்வதிலும் கடும் சிரமம் ஏற்படும். சிப்காட் நிர்வாகம் தங்களது கிராமத்தில் கம்பிவேலை அமைப்பதற்கான நியாயமான காரணத்தைக் கூறிடாமல் திடீரென எவ்வித முன்னறிவிப்புமின்றி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், சிப்காட் நிர்வாகம் இந்த கம்பிவேலி அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்இல்லையென்றால் அடுத்தக்கட்டமாக மக்களைத் திரட்டி சிப்காட் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் கூறினர்

Top