logo
கொரோனா  முடக்கம் தளர்வு: இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரோடு மாவட்டம்

கொரோனா முடக்கம் தளர்வு: இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரோடு மாவட்டம்

06/Jul/2021 01:01:18

ஈரோடு, ஜூலை: கொரோனா பரவல் காரணமாக  முடங்கிப்போயிருந்த  ஈரோடு மாவட்டம் அரசு அறிவித்த தளர்வுகளால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் சில தளர்வுகள் உடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. எனினும் தொற்றின் தாக்கம் குறையாததால் மே மாதம் 24 -ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

டாஸ்மாக், வழிபாட்டுத் தலங்கள், நகைக்கடை, ஜவுளிக்கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழக அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கையால் தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை 5 முதல் வரும் 11-ஆம் தேதி வரை மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தளர்வுகள் திங்கள்கிழமை  நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி  ஈரோடு மாவட்டத்தில் 2  மாதங்களுக்குப் பிறகு  பேருந்து  போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 13 கிளைகளில் தினமும் 728 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பொது முழக்கத்தால் கடந்த இரண்டு மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த  அரசு  போக்குவரத்துக்கழக போருந்துகள்  செயல்படத் தொடங்கியது.

முதல்கட்டமாக 400  பேருந்துகள் இயக்கப்பட்டன. காலை 6 மணி முதல்  பேருந்துகள் இயங்கத்தொடங்கின. பேருந்து நடத்துனர்கள், ஓட்டுனர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். ஏற்கெனவே அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருந்தது. உள்ளூர்  முதல் வெளி மாவட்டங்களுக்கும்  பேருந்துகள் இயக்கப்பட்டன. 

முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதைப்போல் கோபி, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் பேருந்துகள்  இயக்கப்பட்டன.ஆனால்  தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 269 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 40  பேருந்துகள் மாவட்டத்துக்கு உள்ளேயும், மற்றவை வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வந்தன. இன்று 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் என்று கூறியிருந்தால்  தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


இதேபோல் கடந்த இரண்டு மாதமாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள்  பொது மக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டன. குறிப்பாக இன்று ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட கோவில்கள் திறக்கப்பட்டன.ஈரோடு மாநகர் பகுதியில் புகழ்பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், திண்டல் வேலாயுதசாமி கோவில், கொங்கலம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்கள்  திறக்கப்பட்டன. 

இதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள் பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டன.இன்று காலை வழக்கம் போல் கோவில்கள் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பொது மக்கள் பயபக்தியுடன் வந்து வழிபட்டனர்.இதை போல் 2 மாதங்களுக்கு பிறகு நகைக்கடைகள், ஜவுளிக் கடைகளும் இன்று திறக்கப்பட்டன. முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்பநிலை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. 

இதனால் இன்று ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு பகுதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நகை ஜவுளி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் இந்த பகுதிகள் இன்று பரபரப்பாக காட்சி அளித்தன. இதேபோல் இன்று முதல் உணவகங்கள், மற்றும் டீக்கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளருடன் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி  உணவகங்கள் டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர். 

இதைப்போல் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கின. ஈரோடு வ.உ.சி. பகுதியில் உள்ள பூங்காவும் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டன. இதைப்போல் ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிமாக செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் இன்று முதல் மீண்டும் வ. உ. சி .பூங்கா பகுதியில் இருந்து செயல்பட தொடங்கியது. இதேபோல்ஈரோடு வஉ சி பூங்கா பகுதியில் உள்ள அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட்டன. 

மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகள் செயல்படத் தொடங்கின. யோகா பயிற்சி நிலையமும் செயல்பட தொடங்கியது. மாவட்டத்துக்கு உள்ளேயும், வெளியேயும் வந்து செல்ல இருந்து வந்த இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட வாகனங்கள் எண்ணிக்கை இன்று அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஏறத்தாழ  மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை திரும்பிகொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.


Top