logo
ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் குண்டம்-தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை

ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் குண்டம்-தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதியில்லை

06/Dec/2020 08:27:24

ஈரோடு, டிச:  ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை  நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோயில் பூசாரி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.

ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்னமாரியம்மன், பெரிய மாரியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி நடப்பாண்டுக்கான குண்டம்,தேர்த்திருவிழாவுக்காக கடந்த மாதம் 24-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ஆம் தேதி கோயில்களில் கம்பம் நடப்பட்டு பூவோடு நிகழ்ச்சி நடந்தது. 

அதனைத் தொடர்ந்து  தினமும்  ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குண்டம் விழாவுக்காக நேற்று  இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டது. 

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் விழா இன்று  காலை நடந்தது. கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி, அம்மனுக்கான நேர்த்திக்கடனை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில், தேரில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சில அடி தூரம் தேர் இழுக்கப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டது.

பின்னர் அம்மன் சிலை மீண்டும் கோயிலுக்குள் எடுத்து செல்லப்பட்டது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளின் காரணமாக பக்தர்கள் குண்டம் மற்றும் தேர் வடம் பிடித்து இழுத்தலில் அனுமதிக்கவில்லை. ஆனால், நிகழ்ச்சி முடிந்து அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.

Top