logo
உடல் வெப்பத்தை சமாளிக்க  உதவும் நுங்கு விற்பனை தீவிரம்

உடல் வெப்பத்தை சமாளிக்க உதவும் நுங்கு விற்பனை தீவிரம்

19/Apr/2021 02:50:55

புதுக்கோட்டை, ஏப்: சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க உதவும் பனை நுங்கின் விற்பனை சூடுபிடித்துள்ளது.

 புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிகளில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் நுங்கை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். மே, ஜூன் மாதங்களில் காணப்படும் மிகக்கடுமையான வறட்சியை தாங்குவதற்கும், வெயிலின் சூட்டைத் தணிக்கவும் பொதுமக்கள் படாதபாடுபடுகின்றனர். இதைச்சமாளிக்க   ஐஸ்கிரீம், பழரசம்,  குளிர் பானங்களோடு, இளநீர், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு, 

மோர் ஆகியவற்றையும்  சாப்பிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், பொதுமக்கள் பெரிதும் விரும்பக்கூடிய ரசாயனக் கலப்படமற்ற இயற்கையான உணவு பொருட்களுக்கு தற்போது  மதிப்பு  கூடி வருகிறது. இதில் சீசன் ஏதுமின்றி ஆண்டுதோறும் பரவலாக இளநீர் விற்கப்படும் நிலையில், சீசனுக்கு முன்பாகவே தர்பூசணியும், வெள்ளரிப்பிஞ்சும், வெள்ளரிப் பழங்களும் விற்பனைக்குவந்து குவிந்துள்ளன.

இளநீருக்கு இணையான நுங்கு மட்டும் ஏகோபித்த மக்களின்  விரும்பும் பொருளாக இருந்து வருகிறது.பொதுமக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தற்போது  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் விற்பனை செய்யப்பட்டு வரும் நுங்கையும் பொதுமக்கள் அதிகமாக வாங்கிச்சாப்பிடுகின்றனர். தாகத்தை தணிக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் நுங்கு பயன்படுவது ஒருபுறம் இருந்தாலும், வெப்பத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வேர்க்குரு போன்ற  தோல் பாதிப்புகளுக்கு உடலில் பூசிக்கொள்ளும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

 ஒரு நுங்கின் விலை ரூ.10 -க்கு விற்பனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் பனைமரங்கள் பராமரிப்பின்றி குறைந்து விட்டபோதும், அன்னவாசல், முக்கண்ணாமலைப் பட்டி, செங்கப்பட்டி, இலுப்பூர், மலைக்குடிப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்சமயம் நுங்கு வெட்டப்படுகிறது. நுங்கிற்கான முழுமையான சீசன், தாமதமாக தொடங்கியுள்ள நிலையில் தற்போது ஒரு நுங்கின் விலை 10 ரூபாயும், 3 நுங்கு சுளைகள் 10 ரூபாய் என விற்கப்படுகிறது.   விலையை பொருள்படுத்தாமல்  பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வெப்பத்தை சமாளித்து வருகின்றனர்.

 

விற்பனை களை கட்டும் சாலையோர கடைகள்

புதுக்கோட்டை முதல் விராலிமலை வரையுள்ள கட்டியாவயல் குருக்களையாப்பட்டி, ஆரியூர் அன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, சத்திரம், காலாடிப்பட்டி, தாண்றீஸ்வரம், இலுப்பூர், மலைக்குடிப்பட்டி விராலிமலை வரை சாலையோரங்களில் கடைகள் அமைக்கப்பட்டு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கம்பு, கேழ்வரகு கூழ், நுங்கு, போன்றவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாக கார், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் வெயிலை சமாளிக்க இது போன்ற தாகம் தணிக்கும் பொருள்களை  வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.

 

 

Top