logo
ஒரே நாளில் டிரம்ப் தரப்பின் 4 தேர்தல் வழக்குகள் தள்ளுபடி

ஒரே நாளில் டிரம்ப் தரப்பின் 4 தேர்தல் வழக்குகள் தள்ளுபடி

06/Dec/2020 06:36:02

நியூயார்க், டிச: ஒரே நாளில் டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட 4 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதில் டிரம்ப் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த மாதம் 3–ஆம் தேதி அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. பின்னர் வாக்கு எண்ணிக்கை 3 நாட்கள் நடந்ததால் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் நிலவியது. இந்த தேர்தலில் அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 46–ஆவது அதிபராக வருகிற ஜனவரி மாதம் 20–ஆம் தேதி பதவியேற்கிறார். ஆனால் தற்போதைய அதிபர் டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார். மேலும் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.

எனவே, ஜோ பிடன் வெற்றிபெற்ற பெரும்பாலான மாகாணங்களில் அவரது வெற்றியை எதிர்த்து டிரம்ப் பிரசார குழு நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளன. எனினும் இந்த வழக்குகளில் டிரம்ப் பிரச்சார குழு தொடர்ந்து பின்னடைவையே சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், ஒரேநாளில் ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 4 மாகாணங்களின் நீதிமன்றங்கள் தேர்தல் முறைகேடு தொடர்பாக டிரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தன.

தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்குகள் தொடரப்பட்டு உள்ளதாக கூறி நீதிபதிகள் வழக்குகளை தள்ளுபடி செய்தனர்


Top