30/Jan/2023 07:01:43
புதுக்கோட்டை: புதுக்கோட்டை
மாவட்டம் ஆலங்குடி அருகே பனசக்காடு அரசுத்தொடக்கப்பள்ளியை
ரூ.5 லட்சம் சொந்த நிதியில் மேம்படுத்த முடிவு செய்த கிராம மக்கள், முன்மாதிரியாக
திகழும் புள்ளாச்சிகுடியிருப்பு அரசுப்பள்ளியை திங்கள்கிழமை பார்வையிட்டு,ஆலோசனை மேற்கொண்டனர்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட
பனசக்காடு அரசு தொடக்கப்பள்ளியை மேம்படுத்துவதற்கு கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதற்கான ஆலோசனைக்கூட்டம் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு,
அரசு மருத்துவர் எஸ்.அருள் தலைமை வகித்தார்.லெ.அடைக்கலம், ஆனந்தன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பள்ளி, அங்கன்வாடி கட்டடத்தின் சேதமடைந்த
பகுதிகளை சீரமைத்து,வர்ணம் பூசி, இரு வகுப்பறைகளையும்
ஏசி வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றுவது, மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில்
கட்டடம் கட்டுவது, விளையாட்டு உபகரணங்கள்,
கணினிகள்,சோலார் இன்வெர்ட்டர், குடிநீர் வசதிகளை மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட பணிகளை
சொந்த நிதி, கொடையாளர்களின் உதவியுடன் மேற்கொள்வது. மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர்,
பேவர்பிளாக் தளம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவைகளை அரசுநிதி மூலம் பெறுவதற்கு முயற்சிகள்
மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து,பள்ளியின்
வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்ட கிராமத்தினர், இதுபோன்று பள்ளியை ஏற்கனவே
ஸ்மார்ட் வகுப்பறையுடன், பேவர் பிளாக் தளம், கலையரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தி
முன்மாதிரியாக திகழும் புள்ளாச்சி குடியிறுப்பு அரசுத்தொடக்கப்பள்ளியை பனசக்காடு பள்ளியின்
ஆசிரியைகள், கிராம மக்கள், பெற்றோர்கள் திங்கள்கிழமை பார்வையிட்டனர். பள்ளியின் தோற்றம்
, ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்டு, அப்பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர்
கழகத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோரை சந்தித்து, பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள்,
செலவீனங்கள், வசதிகள், அரசு நிதி பெறும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை
மேற்கொண்டனர்.