 
                                            09/Oct/2023 07:42:02
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள செங்கமேடு ஊராட்சி கண்ணுத்தோப்பு கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள மேல்நிலைநீர்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், அந்த மேல்நிலைநீர்தேக்க தொட்டியின் மின்மோட்டார் சிலமாதங்களு்கு முன்பு பழுதாகியுள்ளது. அதனால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.இதனால், அப்பகுதி மக்கள் உடனே குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலிக்குடங்களுடன் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் ஒன்றிய அலுவலர்கள், கறம்பக்குடி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.இந்த மறியல் போராட்டத்தால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.