logo
சேவினிப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் பெயரில் நூலகத்தை நிறுவிய இளைஞர்கள்...!

சேவினிப்பட்டி கிராமத்தில் அம்பேத்கர் பெயரில் நூலகத்தை நிறுவிய இளைஞர்கள்...!

27/Oct/2020 11:22:33

திருப்பத்தூர்:  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தாலுகா, கீழச்சிவல்பட்டி அருகே சேவினிபட்டி கிராமத்தில் கல்வியால் இணைவோம் இயக்கம் சார்பில் கட்டி முடித்த டாக்டர் அண்ணல் அம்பேத்கர்  நூலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

அண்ணல் டாக்டர் அம்பேத்கர் இளைஞரணியினர் கல்வியால் இணைவோம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  இந்த நூலகத்தை அமைத்தனர்.அத்துடன், இந்நூலகத்தின் திறப்பு விழாவிற்கு அரசியல்வாதிகள், சமுதாயத் தலைவர்கள் என எவரையும் அழைக்காமல் சேவினிபட்டி கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தியை அழைத்து நூலக கட்டிடத்தினை திறந்து வைக்க கோரினர். அதன் அடிப்படையில் தலைமையாசிரியர் சாந்தி நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.

 அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், இந்தப்பள்ளியில் பயின்று திறனாய்வு தேர்வில் இந்த ஆண்டு மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குவிருதுகளையும், ஊக்கத்தொகையையும்  டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் வழங்கினர்.

 நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்  சேவற்கொடியோன் பேசுகையில், ஒரு தனி நூலகத்தில் அதிக புத்தகம் உள்ளது என்றால் அது இந்த டாக்டர் அம்பேத்கர் நூலகத்தில் மட்டும்தான் என்றார். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து கல்வியால் இந்தியாவில் சட்டத்தை வடிவமைத்தவர் பெருமை பெற்றவர் அம்பேத்கர் மட்டும்தான் என புகழாரம் சூட்டினார். இதில், ஊர் அம்பலம் கருப்பையா, பேராசிரியர் திருக்கோஷ்டியூர் மணிகண்டன், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் அருள்ரோசலின் செஸிலியா பங்கேற்ற அனைவருக்கும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, சேவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ்  இளைஞர்கள், கிராம பொதுமக்கள் டாக்டர் அம்பேத்கர் இளைஞரணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 தனது கிராம வளர்ச்சிக்காக வெளிநாடு வாழ் மற்றும் கிராமத்தினர் இணைந்து ஒரு நூலகத்தை திறந்து பல மாணவர்களின் பகுத்தறிவு, பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், போட்டித்தேர்வுகளுக்கு மிகவும் உதவி புரியும் வகையிலும்  இந்த நூலகத்தினை கிராமத்தில் ஏற்பாடு செய்தது, இந்த கிராமத்தினர் மட்டுமில்லாமல் இப்பகுதி முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இளைஞர்களை பாராட்டியுள்ளனர்..


Top