31/Mar/2020 06:50:16
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சோதனைச்சாவடி அமைத்து கிராமத்திற்கு வருவோருக்கு கிருமி நாசினி தெளித்து, நிலவேம்பு குடிநீர் வழங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அப்பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதரத்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட அரசுத்துறையினர், தன்னார்வலர்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க இரவு பகல் பாராமல் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இருப்பினும், பொதுமக்கள் சிலர் கொரோனா குறித்த போதிய புரிதலின்றி சாலைகளில் வழக்கம்போல், சுற்றித்திரிவது அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்துவருகிறது. இந்நிலையில், கீரமங்கலம் அருகிலுள்ள மேற்பனைக்காடு பகுதி இளைஞர்கள்,ஒன்றிணைந்து கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். அவ்வழியாக வரும் இருச்சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கின்றனர். மேலும், கிராமத்திற்கு வரும் வெளிநபர்களை சோப்பு போட்டு கைகளை கழுவச்சொல்லியும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்தப்பணியை அப்பகுதி இளைஞர்கள் 24 மணி நேரமும் மேற்கொண்டுவருகின்றனர். கொரோனா தொற்றின் ஆபத்தை உணராமல் காரணமில்லாமல் மோட்டார் சைக்கிள்களில் ஊர்சுற்றி திரியும் இளைஞர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்வதும், வழக்கு பதிவு செய்து வரும் நிலையில், ஒரு கிராமத்தின் மொத்த இளைஞர்களும் இணைந்து இதுபோன்று சோதனை சாவடி அமைத்து கொரோனாவில் இருந்து கிராமத்தை பாதுகாக்கும் முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.