logo
மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று புதுகை இராணியார் மகப்பேறு மருத்துவமனை நாளை முதல்   இயங்குகிறது: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்று புதுகை இராணியார் மகப்பேறு மருத்துவமனை நாளை முதல் இயங்குகிறது: அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தகவல்

19/Jan/2021 06:01:03

புதுக்கோட்டை-ஜன:  பொது மக்களின் வசதிக்காக மீண்டும் அதே இடத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் புதுக்கோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு ராணியார் மருத்துவமனை நாளை முதல் செயல்பட உள்ளது. இங்கு 24 மணி நேரமும்  மகப்பேறு பிரிவு  இயங்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை இராணியார் மகப்பேறு மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் நாளை முதல் செயல்பட உள்ளது. இது குறித்து அமைச்சார் விஜயபாஸ்கர் மேலும் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டு பெரும் நகரங்களுக்கு இணையாக உயர் தர பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர பொது மக்களின் இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேலும் ஒரு. மைல்கல்லாக பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று தீவிர முயற்சியால் மீண்டும் இராணியார் மகப்பேறு மருத்துவமனை அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொது மக்களின் வசதியை கருத்தில் கொண்டு பாரம்பரியமிக்க புதுக்கோட்டை இராணியார் மகப்பேறு மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் புதுப்பொலிவுடன் பல்வேறு நவீன வசதிகளுடன் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு ஒப்புயர்வு மையமாக  (20.01.2020) புதன்கிழமையிலிருந்து செயல்பட உள்ளது. இனிமேல் மகப்பேறு பிரசவங்கள் இராணியார் மருத்துவமனையில் முழுமையாக 24 மணிநேரமும் செயல்படும். 

இராணியார் மருத்துவமனையில் மகப்பேறு புறநோயாளிகள் பிரிவு, பிரசவ சிகிச்சைப் பிரிவு, இரத்தப்ப ரிசோதனை பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவு, பச்சிளங் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, இரத்த சேமிப்புப் பிரிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட சேவைப் பிரிவு, பிறப்பு பதிவு மற்றும் பிறப்புச் சான்று வழங்கும் அலவலகப் பிரிவு, குடிதண்ணீர், வெந்நீர் வசதி, லிப்ட் வசதி, அதிநவீன வெண்டிலேட்டர் வசதியுடன் 108 வாகன வசதி அமையப் பெற்றுள்ளது.


மேலும் பிரசவித்த தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகள் இலவசமாக மருத்துவ சிகிச்சை முடித்து வீடு செல்ல 102 வாகன வசதி உள்ளிட்ட     பல்வேறு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் 24 மணிநேரமும் செயல்பட  உள்ளது. புதன்கிழமை கர்ப்பிணிகளுக்குரிய   அனைத்து சிகிச்சைகளும் இராணியார் மருத்துவமனையிலேயே கிடைக்கும். இதன் மூலம்  பொதுமக்கள் தாய்மார்களின்  கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 


பொது மக்கள் வசதிக்காக தீவிர முயற்சியில் மீண்டும் செயல்பட தொடங்கப்பட்டுள்ள இராணியார் மகப்பேறு மருத்துவமனையினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இதையொட்டி 20.01.2021 காலை 9 மணியளவில் இராணியாப் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

Top