15/Oct/2020 12:30:52
புதுக்கோட்டை நகர பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் மது விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் மற்ற பகுதிகளில் இரவு 8 மணி வரை அரசு மதுபான கடைகளில் மது விற்க அனுமதிக்கப்பட்டு வருகிறது ஆனால், மதுக் கூடங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரத்தில் கள்ளச்சந்தையில் மது பானங்கள் விற்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு புகார் வந்தது.
இதுகுறித்து அவர் உத்தரவிட்டதன் பேரில் நேற்று இரவு முதல் நகர போலீஸார் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் இணைந்து புதுக்கோட்டை நகர் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீஸார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 200 -க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் மது விற்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். விதிகளை மீறி கள்ளத்தனமாக மது பானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.