logo
ஆங்கில வழிக்கல்வியில் ஆர்வம்.. கொத்தமங்கலம் மகளிர் மேனிலைப்பள்ளியில் பிளஸ்1வகுப்பில் 60 மாணவிகள்..!

ஆங்கில வழிக்கல்வியில் ஆர்வம்.. கொத்தமங்கலம் மகளிர் மேனிலைப்பள்ளியில் பிளஸ்1வகுப்பில் 60 மாணவிகள்..!

16/Jun/2021 06:03:35

புதுக்கோட்டை, ஜூன்:  ஆங்கிலவழிக்கல்வி பயில ஏற்பட்ட ஆர்வம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலம் அரசினர் மகளிர் மேனிலைப்பள்ளியில் பிளஸ்1 வகுப்பில்   ஒரே நாளில் (16 6 2021) புதிதாக 60 மாணவியர் சேர்ந்துள்ளனர்.

இப்பள்ளியில் இதற்கு முன்பு ஆறாம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி முறை சில ஆண்டுகளாக வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு 11-ஆம் வகுப்பு பாடப் பிரிவில் ஆங்கில வழி கல்வி முறையை கொண்டுவரவேண்டும் என்று கொத்தமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவிகளும்  பெற்றோர்களும்  அரசுக்கு  கோரிக்கை வைத்திருந்தனர். இக்கோரிக்கை  கல்வித் துறையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதை அறிந்த தமிழக சுற்றுச்சூழல் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர்  சிவ வீ மெய்யநாதன்  மேற்கொண்ட நடவடிக்கையின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  டி விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் இதற்கான முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.

அதன்படிபொறுப்பு தலைமை ஆசிரியர் ஜெயசங்கர் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் துரை.ராஜன், சிவசாமி, தயாநிதி உள்ளிட்டோர் முன்னிலையில் புதன்கிழமை (16 6 2021) நடைபெற்ற மாணவிகள்  சேர்க்கை நிகழ்ச்சியை மாவட்டக்கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம்  தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்கொத்தமங்கலம் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவியர் பலரும்  மருத்துவர்களாக பொறியாளர்களாக வழக்குரைஞர்களாக ஆசிரியர்களாக அறிவியலாளர்களாக வல்லுனர்களாக இன்னும் பல துறைகளிலும் சிறந்தவர்களாக உலகம் முழுவதும்  விளங்கி வருகிறார்கள்.

அதேநேரத்தில் மாவட்ட ஆட்சி பொறுப்பு என்று சொல்லக்கூடிய இந்திய ஆட்சிப் பணிக்கு (ஐஏஎஸ்) படித்தவர்களாக யாரும் வரவில்லை என்பது பெருங்குறையாக இந்த கிராம மக்களிடம்  இருக்கிறது. அதைப் போக்குவதற்கான முதல் முயற்சியாக   பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்று  இக்கிராமத்தை கல்வியில் மேலும் உயர செய்வதற்கும் மாணவர்களின் மேம்பட்ட உயர் கல்விக்கும் இப்போது முதலே ஆங்கில வழிக் கல்விக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பெற்றோரும் மாணவியரும் வாய்ப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கொத்தமங்கலம் மட்டுமல்லாது சுற் று வட்டார கிராமங்களில் இருந்து மாணவிகளை இங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும். புதிய ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது.

மாணவிகளும் ஆங்கிலக் கல்வியில் உள்ள தயக்கத்தை போக்கி ஒவ்வொருவரும் ஐஏஎஸ் கனவை நிறைவேற்ற வேண்டும். இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க போகிறது என்று அறிவித்தவுடன் இரண்டே நாளில் 60 மாணவியர் வந்து சேர்ந்து இருப்பது கொத்தமங்கலம் அரசு மகளிர் மேனிலைப் பள்ளியின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை யையும் மக்கள் மத்தியில் இந்தப்பள்ளிக்கு இருக்கும்  நற்பெயரையும் எடுத்துக் காட்டும் விதமாக உள்ளது  என்றார்.

இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவியரும் அவர்தம் பெற்றோரும் இருபால் ஆசிரியப் பெருமக்களும்  கலந்து கொண்டனர்.

Top