08/Oct/2020 05:37:27
சென்னை: கர்நாடகத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கர்நாடக அரசு, அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் வழியில் கல்வி கற்பிற்கும் பள்ளிகளைத் திறந்து, தமிழ் மாணவர்கள், அவர்கள் தாய் மொழியில் கல்விக் கற்பதை உறுதி செய்தது. அதே சமயம், தமிழ் வழிப் பள்ளிகளை திறக்க தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது, கர்நாடகத்தில் உள்ள தமிழ் பள்ளிகள் மற்றும் கல்லுரிகளில், காலியாக இருக்கும் தமிழ் ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்படாமல் இருப்பதாகவும், தமிழ் வழிப் பள்ளிகளைத் திறக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் கர்நாடக தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் பொருளாதார வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது, கோலார் தங்க வயல், காபி எஸ்டேட் உள்ளிட்ட பல இடங்களில் அதிகமான தமிழர்கள் பணியாற்றி வருகிறார்கள். விவசாயம் மற்றும் கட்டுமானத் துறையிலும் தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது.
எனவே, தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக, கர்நாடகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ்ப் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,சமீபத்தில் மூடப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும்.
புதிதாக தனியார் தமிழ் வழிப்பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும், இதர மொழிப் பள்ளிகளாக மாற்றப்பட்ட தமிழ் வழிப் பள்ளிகளை மீண்டும் தமிழ் வழிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.