logo
தமிழகத்தில் இருந்து விமானங்களை முழுமையாக இயக்கலாம்: தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் இருந்து விமானங்களை முழுமையாக இயக்கலாம்: தமிழக அரசு அனுமதி

18/Feb/2021 10:58:21

தமிழகத்தில் இருந்து விமானங்களை முழுமையாக இயக்கி கொள்ள  தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் விமானங்களுக்கான சேவைகளை அதிகரிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு விமான நிலைய இயக்குநர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதாவது, உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கையை 50 என்ற  எண்ணிக்கையில் இருந்து 144 ஆக உயர்த்த வேண்டுமெனவும், மாநிலத்துக்குள் இயக்கப்படும் விமானங்களுக்கு இப்போதுள்ள எண்ணிக்கை நிலையை நீக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார்.

சேலம் உள்ளிட்ட விரும்பத்தக்க விமான சேவைகளில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் விமானங்களை இயக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மற்ற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை 50-லிருந்து 100 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனிடையே, கடந்த அக்டோபர் 3-ஆம் தேதியன்று தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், சென்னையில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை 100-லிருந்து 150 ஆக உயர்த்திக் கொள்ளவும், தமிழகத்துக்குள் நாள்தோறும் 50 விமான சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கும், மாநிலத்துக்குள்ளும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டுமென மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர், தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள் உள்ளேயும் இயக்கப்படும் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது..

Top