logo
ஈரோடு பஸ் நிலையங்களில் ரயில்வே முன்பதிவு  டிக்கெட் மையம் அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஈரோடு பஸ் நிலையங்களில் ரயில்வே முன்பதிவு டிக்கெட் மையம் அமைக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

05/Aug/2021 11:38:07

ஈரோடு, ஆக: ஈரோடு பஸ் நிலையங்களில் ரயில்வே முன்பதிவு  டிக்கெட் மையம் அமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது குறித்து முன்னாள் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கே .என். பாஷா வெளியிட்டுள்ள அறிக்கை: 

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் ஈரோடு பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. ஈரோட்டில் இருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.  நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து விடுகின்றனர். 

இந்நிலையில், ஈரோடு பஸ் நிலையத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் பஸ் நிலையத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.

எனவே இங்கு சுலபமாக மக்கள் வந்து முன்பதிவு செய்து செல்கின்றனர்.  இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்திலும் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.40 கோடி மதிப்பில் ஈரோடு பஸ் நிலையத்தில்  பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதுமட்டுமில்லாமல் ஈரோடு பஸ் நிலையம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒன்று சோலாரிலும், மற்றொன்று ஈரோட்டிலும் அமைக்கப்படுகிறது.புதிதாக அமைய உள்ள பஸ் நிலையங்களில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இதன் மூலம் ஈரோடு மாவட்ட பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  ரயில் பயணத்தில் பல ஆண்டுகளாக வயது முதிர்ந்த ஆண்கள் பெண்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23 -ஆம் தேதி முதல் இந்தச் சலுகையை ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்துவிட்டது.

பல ஆண்டுகளாக 60 வயது முதிர்ந்த ஆண்கள் ரெயில் பயணம் செய்தால் அவர்களுக்கு 40 சதவீத கட்டணம் சலுகையாக வழங்கப்பட்டது. 58 வயது பெண்கள் பயணம் செய்தால் அவர்களுக்கு 50 சதவீத சலுகை கட்டணம் அறிவித்து நடைமுறையில் இருந்து வந்தது. தற்சமயம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக இம்முறை ரத்து செய்துவிட்டது. எனவே மீண்டும் இந்த கட்டண சலுகை முறையை அமல்படுத்த வேண்டும் என  அவர் குறிப்பி்ட்டுள்ளார்.

Top