logo
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த எலான் மஸ்க்

09/Jan/2021 07:06:29

புளூம்பெர்க் வௌியிட்டுள்ள பில்லியனர்கள் ஆய்வு அறிக்கையின்படி, சி.டி.ஓ நிறுவனரும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை வடிவமைப்பாளரும், டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், தயாரிப்பு கட்டிடக் கலைஞருமான எலன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார்.

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸை இரண்டாவது இடத்திற்கு தள்ளி, அவர் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார். புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, ஜெப் பெசோஸின் மொத்த நிகர மதிப்பு 4.24 பில்லியன் டாலர் குறைந்து 184 பில்லியன் டாலராக உள்ளது. அதே நேரத்தில் எலன் மஸ்க்கின் மொத்த நிகர மதிப்பு முந்தைய 181 பில்லியன் டாலரிலிருந்து 4.74 பில்லியன் உயர்ந்து 185 பில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் எலன் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.

உலகின் பணக்காரர் ஆன பிறகு, இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட எலன் மஸ்க், விசித்திரமானது என்று கூறியுள்ளார். முன்னதாக நேற்று டெஸ்லாவின் பங்கு விலையில் 4.8 சதவிகித முன்னேற்றம் ஏற்பட்டதால் ஜெப் பெசோஸை பின்னுக்கு தள்ளி எலன் மஸ்க்கை முதல் நிலைக்கு முன்னேறியுள்ளார்.

ஜெப் பெசோஸ் அக்டோபர் 2017 முதல் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வந்த நிலையில், இந்த 2021 தொடக்கத்தில் எலன் மஸ்க் வரலாற்றை மாற்றியுள்ளார்.

இது மட்டுமல்லாது சுமார் 30 மில்லியன் டாலர் நிகர மதிப்புடன் 2020 தொடக்கத்தில் உலகின் மிகப்பெரும் 50 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறத் தொடங்கிய எலன் மஸ்க், ஒரே வருடத்தில் 150 பில்லியன் டாலருக்கும் அதிகமாக தனது சொத்து மதிப்பை உயர்த்தி அசுர வளர்ச்சி கண்டுள்ளார். டெஸ்லாவின் பங்கு விலை கடந்த ஆண்டு 743 சதவீத வளர்ச்சியைக் கண்டது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

Top