logo
 புதுக்கோட்டை நகராட்சி அலுவலக கட்டிடத்தை ஏலம் விடும் வினோதப் போராட்டத்தை நடத்திய ஜனநாயக தூய்மை தொழிலாளர் சங்கத்தினர்

புதுக்கோட்டை நகராட்சி அலுவலக கட்டிடத்தை ஏலம் விடும் வினோதப் போராட்டத்தை நடத்திய ஜனநாயக தூய்மை தொழிலாளர் சங்கத்தினர்

13/Jul/2021 04:54:36

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று மாத காலமாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்காததைக் கண்டித்து நகராட்சி அலுவலகக்கட்டிடத்தை ஏலம் விடும் போராட்டத்தில்  ஜனநாயக தூய்மை தொழிலாளர் சங்கம் (DTUC) செவ்வாய்க்கிழமை  ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்:  புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம்  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாகவும்  நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் கடந்த மாதமும் ஊதியம் வழங்கவில்லை. முன்கள பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை கடந்த ஆண்டு  அளிக்கவில்லை. இந்த ஆண்டில்  சீருடை, மாஸ்க், கையுறை, காலணி வழங்கவில்லை. பிஎப், சரண்டர், அரியர்ஸ் போடவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை வெளியேற்றுகின்ற சாதியின் பெயரால் தூய்மை தொழிலாளர்களை அவமானப்படுத்தகின்ற மேஸ்திரிகளை இடமாற்றம் செய்யவில்லை.

இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தோம். 29-ஆம் தேதி புதிய பேருந்து நிலையத்தில் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினோம். ஆனாலும், பிரச்னை தீராத காரணத்தினால் வேறுவழியின்றி, பணம் இல்லை என்ற பதிலையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்ற நகராட்சி நிர்வாகத்திற்கு சம்பளம் போட பணம் திரட்டி கொடுக்கக்கூடிய வகையிலே நகராட்சி அலுவலக கட்டிடத்தை ஏலம் போடும் போராட்டத்தை ஜனநாயக தூய்மை தொழிலாளர் சங்கம் அறிவித்திருந்தது.

அதன்படி நகராட்சி அலுவலக வாசலில்  காலை 11 மணிக்கு  நடைபெற்ற  ஏலம் விடும்  போராட்டத்திற்கு சங்கத்  தலைவர் க.சி. விடுதலைக்குமரன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தொடங்கிவைத்தார்.

சங்கத்தின்  செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி மைய குழு உறுப்பினர்கள் ராஜா, அருண்குமார் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன் முத்துசாமி, ஆனந்த் மற்றும் திரளான தூய்மை தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் நகராட்சி அலுவலக கட்டிடம் ஏலம் விடப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டதன் பேரில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தைக்குப்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த வார இறுதிக்குள் அதாவது 16-7-2021 -தேதிக்குள் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவது, இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி முகாம் நடத்துவது, ஒப்பந்த மேஸ்திரி முத்து மற்றும் மேலாளர் அரவிந்த் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய ஒப்பந்த நிறுவனத்தை அறிவுறுத்துவது, இந்த மாத இறுதிக்குள் சீருடை  வழங்குவது, ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்குவது போன்ற  அம்சங்களை நிறைவேற்றுவதெனவும் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. 

Top