logo
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ரூ.75 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்  திறப்பு

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ரூ.75 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் திறப்பு

11/Feb/2021 11:58:45

புதுக்கோட்டை, பிப்:  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ரூ.75 லட்சத்தில்  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 

பின்னர்  அமைச்சர் கூறியதாவது:  மக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழும் வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

 இதன்படி அரசு மருத்துவமனைகளுக்கு புதிய கட்டடங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில்  திருவரங்குளம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடம் மற்றும் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட சித்த மருத்துவப் பிரிவு கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட கட்டிடங்களில் போதிய இடவசதி மற்றும் நவீன வசதிகளுடன் சிறப்பாக செயல்படும். இதன் பயனாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த பயன் பெறுவார்கள்.

தமிழக அரசு கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கி வருகிறது. இதே போன்று தாய் சேய் நலன் பேணி பாதுகாக்கும் வகையில் அம்மா குழந்தைகள் நல பரிசுப்பெட்டகம், அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் போன்றவற்றை வழங்கி வருகிறது. மேலும் தற்பொழுது கிராமப்புற பகுதிகளில்  திறக்கப்பட்டு வரும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கால் பொது மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற பல்வேறு நோய்களுக்கு தங்களது இருப்பிடங்களிலேயே சிகிச்சை பெற வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது என்றார்  சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ஜெயலெட்சுமி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல்கதீஜா, பொது சுகாதார துணை இயக்குநர் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர்  அருள், ஆலங்குடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் இராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் வி.சி.இராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Top