logo
ஈஐடி பாரி  கரும்பு ஆலை விவசாயிகளுக்குத் தரவேண்டிய  ரூ.64 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எல்எல்ஏ- சின்னத்துரை  வலியுறுத்தல்

ஈஐடி பாரி கரும்பு ஆலை விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.64 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எல்எல்ஏ- சின்னத்துரை வலியுறுத்தல்

01/Jul/2021 05:18:17

புதுக்கோட்டை, ஜூலை:  ஈஐடி பாரி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்குத் தரவேண்டிய ரூ.64 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத்தர  மாவட்ட ஆட்சியர் விரைந்து  நடவடிக்கை எடுக்க  வேண்டுமென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து  அவர்  அளித்துள்ள மனுக்களில் கூறியிருப்பது:

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூரில் செயல்பட்டுவந்த ஈஐடி பாரி சர்க்கரை ஆலை கடந்த 2019-ஆம் ஆண்டு கரும்பு அரவையை  நிறுத்திவிட்டது. இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டுமுதல் ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்குத் தர வேண்டிய  ரூ. 64 கோடி   நிலுவைத்தொகையை இதுநாள் வரை வழங்காமல்  நிறுத்தி வைத்துள்ளது.

இதனால், விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இத்தொகையை சம்மந்தப்பட்ட விவசாயிகளுக்கு விரைந்து கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஈஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு உள்பட்ட கரும்பு பகுதிகளை அருகில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு  மாற்றித்தரவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் மாட்டுவண்டி குவாரி அமைக்க வலியுறுத்தல்:

டந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளாறு, அக்னி ஆறுகளின் ஓரங்களில் மணல் அள்ளி மாட்டுவண்டித் தொழிலாளர்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

கடந்த 2006 -ஆம் ஆண்டு  முதல் கறம்பக்குடி அருகே அக்னி ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கு கடந்த சில ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மாண்டுவண்டியில் மணல் அள்ளிப் பிழைப்பு நடத்துபவர்கள் மிகவும் எளிய குடும்பத்தினர் என்பதையும், இவர்கள் அள்ளும் மணல் உள்ளூர் கட்டுமானப் பணிகளுக்கே பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கணக்கில் கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆற்றுப் படுகைகளில் மாட்டுவண்டி மணல்குவாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கீரனூரில் குடிநீர்த் தட்டுப்பாடு:

கந்தர்வகோட்டை தொகுதி கீரனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர்தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. இங்கு 15 முதல் 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.

இதனால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தனியாரிடம் அதிக விலைகொடுத்து குடிநீரைப்பெற வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, கீரனூர் பகுதிக்கு குறைந்தது இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது குடிநீர் கிடைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தீர்வுகாண வேண்டும்.

இவ்வாறு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை மாவட்ட ஆட்சியரை  நேரில் சந்தித்து அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் .ராமையன், சிஐடியு மாவட்டச் செயலாளர் .ஸ்ரீதர், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டப் பெறுப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்..

 

Top