logo
ஆக. 1-ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் : அமைச்சர் பொன்முடி

ஆக. 1-ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் : அமைச்சர் பொன்முடி

28/Jun/2021 05:11:39

சென்னை, ஜூன்:தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர்  பொன்முடி மேலும் கூறியதாவது:  தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வருகிறது. அவ்வாறு செய்யக் கூடாது. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும்  மாணவர் சேர்க்கையை  ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகேதொடங்க வேண்டும்.

மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கான மதிப் பெண் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். எனவே அதன்பிறகு, ஆகஸ்ட் 1 -ஆம் தேதி க்குப் பிறகே கல்லூரி மாணவர்  சேர்க்கையைத் தொடங்க வேண்டும். 

பொறியியல் கல்லூரிகளில் வழக்கமான சேர்க்கை முறையே தொடரும். முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சலுகைகள் வழக்கம் போல தொடரும் என்று தெரிவித்துள் ளார்.  கொரோனா பேரிடர் காலம் என்பதால், கல்லூரி மாணவர் சேர்க்கையில் கால தாமதம் ஏற்படுகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும். ஏற்கெனவே, கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்திருக்கிறோம் என்பதால், நீட் தேர்வையும் ரத்து செய்வோம் என்றார் அமைச்சர் பொன்முடி.

Top