logo
 சொற்கள்தான் படைப்பின் தரத்தை நிர்ணயிக்கின்றன: கவிஞர் நந்தலாலா பேச்சு

சொற்கள்தான் படைப்பின் தரத்தை நிர்ணயிக்கின்றன: கவிஞர் நந்தலாலா பேச்சு

03/Jan/2021 07:46:34

புதுக்கோட்டை, ஜன: ஒரு படைப்புக்கு தேர்வு செய்யும் சொற்கள்தான் அந்தப் படைப்பின் தரத்தை நிர்ணயிக்கின்றன என்றார் கவிஞர் நந்தலாலா.

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சிறந்த கவிதை நூலுக்கான விருது கவிஞர் தங்கம்மூர்த்திக்கு அண்மையில் வழங்கப்பட்டது. அதேபோல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது பேராசிரியர்  அ.செல்வராசுக்கு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில்  இருவருக்குமான பாராட்டரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமுஎகச திடல் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு  மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின்சரவணன் தலைமை வகித்தார். கவிஞர் தங்கம்மூர்த்தி எழுதிய ‘தேவதைகளால் தேடப்படுபவன்’ என்ற கவிதை நூல் குறித்து கவிஞர் நந்தலாலா, பேராசிரியர் அ.செல்வராசு எழுதிய முத்தொள்ளாயிரம்  பதிப்பு வரலாறு என்ற ஆய்வுநூல் குறித்து கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். 

 நிகழ்ச்சியில் கவிஞர் நந்தலாலா பேசியது: தமிழையும், அதன் மொழி வளத்தையும் தொடர்ச்சியாக காப்பாற்றி வந்தது விவசாயிகளே. அதன் தொடர்ச்சியாக படைப்பாளிகள்தான் தமிழை மங்காமல் பாதுகாத்து வருகின்றனர். ஒரு படைப்புக்கு தேர்வு செய்யும் சொற்கள்தான் மிக முக்கியம். அதுதான் அந்தப் படைப்பின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஒரு நல்ல புத்தகத்தை ரசித்துப் படிப்பவனுக்கு புத்துணர்ச்சியை  அந்த நாள் முழுவதும்  தருகிறது. தனக்குள்ளான அழுக்கை உணர்ந்து குற்றவுணர்வை ஏற்படுத்துவதுதான்  ஒரு நல்ல படைப்பின் வேலை. வாழ்க்கையை உற்றுக் கவனிக்கிற ஒருவனால் மட்டுமே சிறந்த படைப்புகளைத் தர முடியும்.

அத்தகைய அழகிய கவிதைகளை எளிய மொழியில் கவிஞர் தங்கம்மூர்த்தி படைத்திருக்கிறார். தான் சந்திக்கிற மனிதர்களை, பறவைகளை, விலங்குகளை, இயற்கையை தேவதைகளால் தேடப்படுபவன் என்கிற புத்தகத்தின் மூலம் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார். இத்தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் விருது வழங்கியிருப்பது மிகவும் பொருத்தமானது. இதுபோன்ற படைப்புகளை அவர் தொடர்ந்து தமிழுக்கு வழங்க வேண்டும் என்றார் கவிஞர் நந்தலாலா.

மூவேந்தர்களின் வீரத்தையும், காதலையும் பேசும் படைப்பாக முத்தொள்ளாயிரம்  இருக்கிறது: கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் பேச்சு.

செம்மொழித் தமிழ் அரசாணை மூலமாக  14.10.2004 அன்று செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அரசாணை மூலமாக செம்மொழிக்கான தகுதி வழங்கப்பட்ட ஒரே மொழி தமிழ். செம்மொழிக்கான தகுதியாக வரையறுக்கப்பட்ட சங்க இலக்கியம், திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் உள்ளிட்ட 41 நூல்களில் ஒன்றாக முத்தொல்லாயிரம் இருக்கிறது.

மூவேந்தர்களின் வீரத்தையும், காதலையும் பேசும் படைப்பாக முத்தொல்லாயிரம் இருக்கிறது. போர்க்களங்களில் மார்புகளில் புண்படுவது தமிழனின் வீர மரபு. போர்க்களத்தில் தனது ஒரு தந்தத்தை இழந்த ஆண் யானை அதன் இணையை சந்திக்கக் செல்கிறது. அப்போது ஒரு தந்தம் இல்லாததை மறைக்க அது குத்திக் கிழித்துப்போட்ட எதிரிகளின் குடல்களை உருவி தலைப்பாகையாக கட்டி மறைத்தததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மீன்கள் வலைவீசியதாக பெண்களின் கண்களை உருவகப்படுத்தும் தற்போதைய நவீனக் கவிதைகளின் கூறுகள் முத்தொள்ளாயிரத்தில் உள்ளன.

கைகளில் உள்ள வில் எதிரியை குறிபார்த்தவாறு வீழ்த்தப்பட்டுக்கிடக்கிறான் எதிரி நாட்டுப் போர் வீரன். வீழ்த்தப்பட்டுக் கிடப்பவனின் முகத்தில் உள்ள ஆவேசத்தைக் கண்டு ஒருகனம் திடுக்கிட்டுப் போகிறான் மன்னன். இதைக் காட்சிப்படுத்திய ஒருபாடல் போரில் வீழ்த்தப்பட்டுக் கிடப்பவனே வெற்றியாளனாகச் சித்தரிக்கிறது.

இத்ததைய சிறப்பு வாய்ந்த முத்தொள்ளாயிரத்தின் பதிப்பு வரலாறு குறித்து ஆய்வுசெய்திருக்கிறார் பேராசிரியர் அ.செல்வராசு. 23 பேரின் பதிப்புகளை மிகவும் நேர்மையாக பகுத்து அறிந்துள்ளார். எந்த இடத்திலும் நடுநிலை தவறாது, தனது மேட்டிமையைக் காண்பிக்காது மிக நேர்த்தியாக நடத்தப்பட்டுள்ளது ஆய்வு.

இப்படி வந்திருக்க வேண்டும் என்று மிகவும் இலகுவான மொழியில் தனது ஆலோசனைகனை முன்வைக்கிறார்.முத்தொள்ளாயிரம்  தொடர்பான நூல்கள் மட்டுமல்லாது பல்வேறு நூல்களில் உள்ள கூறுகளையும் ஆய்வுசெய்து இந்த படைப்பு கொண்டுவரப்பட்டுள்ளது இந்நூலுக்கான சிறப்பு.

ஒரு சொல் மாறினாலே எவ்வளவு பெரிய கருத்துப்பிழை ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட சொற்கள், சொல் மாறி இருக்கிறது என்பதை நிறுவுகிறார் ஆய்வாளர். இவற்றையெல்லாம் செழுமைப்படுத்தி செம்பதிப்பாக முத்தொள்ளாயிரம்  வெளிவர வேண்டும் என்பதே ஆய்வாளரின் நோக்கமாக உள்ளது.

இத்தகைய பின்னணியில்தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் நூல் வரிசையிலான கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது  இந்த நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உண்மையாகவே தமிழ்மொழி வளர்ச்சிக்கு உதவும் சிறந்த நூல் முத்தொள்ளாயிரம் பதிப்பு வரலாறு என்பது மறுக்க முடியாக உண்மை. தகுதியான நூலுக்கு தகுதியான அமைப்பிலி ருந்து விருது கிடைத்திருப்பது பாராட்டுக்குறியது என்றார் ராசி.பன்னீர்செல்வம். முன்னதாக  செயலாளர் சு.மதியழகன் வரவேற்றார்.  துரை.அரிபாஸ்கர் நன்றி கூறினார்.

Top