logo
விபத்து நிவாரணம், குழந்தைகள் பாதுகாப்பு இல்ல குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கல்

விபத்து நிவாரணம், குழந்தைகள் பாதுகாப்பு இல்ல குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கல்

21/Jun/2021 06:36:49

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள மற்றும் தற்காலிகமாக வீட்டிற்கு சென்றுள்ள குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  திங்கள்கிழமை (21.6.2021) வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர்  செயல்படுத்தி வருகிறார்.  

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு பெற்ற 25 குழந்தைகள் இல்லங்கள் உள்ளன. கோவிட் தொற்று முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள் சொந்த விருப்பத்தின் பேரில் 579 குழந்தைகள் அவரவர் பெற்றோருடன் தற்காலிகமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்பொழுது 4 குழந்தைகள் இல்லங்களில் மட்டும் 47 குழந்தைகள் தங்கி உள்ளனர். தற்காலிகமாக வீட்டிற்கு சென்றுள்ள மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு உதவிடும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம்

வேல்டு விசன் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட 128 எண்ணிக்கையில் உலர் உணவு பொருட்கள் மற்றும் 60 எண்ணிக்கையில் சத்துணவு என மொத்தம் ரூ.3.71 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுகோவிட் காலத்தில் இது போன்ற சத்தான நலத்திட்ட உதவிகள் இவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றார் ஆட்சியர் கவிதா ராமு.


இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்து மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர்  பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.19 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி, வேல்டு விசன் இந்தியா திட்ட மேலாளர் கிளாடிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top