logo
தோழர்  தா. பாண்டியன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

தோழர் தா. பாண்டியன் மறைவு: தலைவர்கள் இரங்கல்

26/Feb/2021 04:36:10

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், மூத்த தலைவருமான தா. பாண்டியன்(88) வெள்ளிக்கிழமை(பிப்.26) காலமானார்.  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(இன்று) காலை சுமார் 10 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது.


மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது  என்கிற டேவிட் – நவமணி தம்பதிக்கு 1932-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்டியன்.   8-ஆம் வகுப்பு படிக்கும் போது மதுரை உசிலம்பட்டியில் முதன் முதலாக மேடையில் ஏறி பேச்சு போட்டியில் கலந்துகொண்டார். அண்ணன் தா.செல்லப்பா தந்த உற்சாகத்தில் பேச்சாளராக உருவெடுத்தார்.


 காரைக்குடி அழகப்பா கல்லுாரியில் பயிலும் போதே 1952-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்து விட்டார் தா.பாண்டியன். மாணவர் பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்றார். பின்னர் அதே கல்லுாரியில் ஆங்கில ஆசிரியரானார். தா.பாண்டியன்-க்கும், ஜாய்சி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா என்ற மகள்களும் உள்ளனர். கடந்த சிலமாதங்களுக்கு முன்  இவரது மனைவி மறைந்தார். சட்ட மன்ற தேர்தலில் 6 முறையும், நாடாளுமன்ற தேர்தலில் 3 முறையும் போட்டியிட்டார். 


ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நடத்தி வந்த அவர் தனது  கட்சியை கலைத்து விட்டு மீண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில்இணைந்த அவர் 2005-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் முதல் தொடர்ந்து 10 வருடங்கள் மாநில செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார்.  தற்போது தேசிய குழு உறுப்பினராக தொடர்ந்து பதவி வகித்து வருகிறார். 1991 -இல் ராஜீவ் காந்தி மீது மனித வெடிகுண்டு தாக்குதலின் போது அவர் பின்னால் நின்றிருந்த தா.பாண்டியன் துாக்கி வீசப்பட்டார்.

 சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதிசயமாக உயிர்பிழைத்தார். தமிழக வரலாற்றிலேயே முதல்முறை யாக கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா உருவச்சிலை வைத்தபோது, அந்தக்குழுவின் தலைவராக இருந்தவர் தா.பாண்டியன். உடல் நல கோளாறு காரணமாக அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று(பிப்.26) காலை தனது 88-ஆவது வயதில் காலமானார். சென்னையில் அஞ்சலிக்கு பின்னர் அவர் உடல் மதுரை சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில், தமிழக துணை முதல்வர்ஓ. பன்னீர்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பாமக நிறுவனா் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Top