logo
பொதுமக்கள் போராட்டம் எதிரொலி.. ஈரோடு காசியண்ண வீதியின்  சாக்கடை தூர்வாரும் பணி தொடக்கம்

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி.. ஈரோடு காசியண்ண வீதியின் சாக்கடை தூர்வாரும் பணி தொடக்கம்

19/Feb/2021 05:12:30

ஈரோடு, பிப் : ஈரோடு மாநகராட்சி உள்பட்ட 26-ஆவது வார்டு வாசுகி வீதி அருகே உள்ள காசியண்ண வீதியில் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கழிவு நீர் சாக்கடையில் கடந்த சில மாதங்களாகவே தூர்வாரப்படாமல்  குப்பைகள் தேங்கி நின்றது. 

மேலும் சாக்கடையில் பிளாஸ்டிக் போன்ற பொருள்களால் ஏற்பட்ட  அடைப்பு காரணமாக  அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த  அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை பிற்பகலில்  சின்ன மார்க்கெட் அருகே சாலையில் தடுப்புகளை அமைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து  தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீஸார் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த எம்எல்ஏ- கே.வி. ராமலிங்கம்  அப்பகுதியிலுள்ள சாக்கடையை உடனடியாக  தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கூறினார். இதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை  மாநகராட்சி சார்பில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காசியண்ண வீதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

Top