logo
கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

17/Jun/2021 10:05:29

புதுக்கோட்டை, ஜூன்:  கொரோனா நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுத்து கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்கோவிட் நடவடிக்கைகள் தொடர்பாக வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்   முதலமைச்சர்   மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில்  கோவிட் நோய் தொற்று பெருமளவு குறைந்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 450 என்றிருந்த கோவிட் தொற்று தற்பொழுது 69 ஆக குறைந்துள்ளது. விரைவில்  மாவட்டத்தில்  கோவிட் தொற்றில்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை சிறப்பாக  கடைப்பிடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 28 -ஆம் தேதி 3.13 லட்சம் நபர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்பொழுது 1,00, 523 நபர்கள் மட்டுமே கோவிட் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக 62,000 கோவிட் தொற்று சிகிச்சைக்கான படுக்கைகள் தற்பொழுது காலியாக உள்ளன. 70,000 ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவிட் மூன்றாம் அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் குழந்தைகளுக்கு கோவிட் சிகிச்சை அளிக்கும் வகையில் தனி சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட 28 ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும்  இதே போன்று சிகிச்சை பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் அனுமதி கிடைக்கப் பெற்றவுடன் அரசு பல் மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் தினக்கூலி தொழிலாளர்கள் நியமனத்தை தவிர்த்து தற்பொழுது புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்  உள்ளிட்ட பிற பணியாளர்களை சம்மந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களே நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி  தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்துள்ளார். மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கவும், பிரதமர் மோடியை சந்திக்கச் சென்றுள்ள  முதலமைச்சர்  வழியுறுத்த உள்ளார்.

தமிழகத்திற்கு மொத்தம் 11.36 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி தேவைப்படுகிறது. தற்பொழுது தமிழகத்திற்கு 1.16 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற வழியுறுத்தப்பட்டு வருகிறது. கோவிட் தொற்றால் தாய், தந்தையர் இறந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ரூ.5 லட்சமும், தாய், தந்தையரில் யாரேனும் ஒருவர் இறந்தால் ரூ.3 லட்சமும் வழங்கப்படுகிறது.

முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் கோவிட் சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்த விவரங்கள் பொது மக்களுக்கு தெரியும் வகையில் மாவட்ட வாரியாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களிடம் கட்டணம் குறித்த தகவல் கேட்டறியப்பட்டு கூடுதல் கட்டணம் வசூல் செய்த 40 தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கூடுதல் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் உள்ளதுடன் இவற்றிற்கு 13 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.


முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (17.6.2021)  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி  தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  ஆகியோர் முன்னிலையில்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:

தமிழகத்தில் கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முதல்வர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தினை 35 நாட்களுக்குள் தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பாதுகாப்பான வசதிகள் சாதாரண மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  


திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில்  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் (கம்யூனிஸ்டு) மாரிமுத்து  பேசுகையில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பொது மக்கள் உயிரை பாதுகாப்பதில் தமிழக முதலமைச்சர்   அறிவுரைகளின்படி   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எடுத்திருக்கும் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கொரோனா 3 -ஆவது அலை வந்தால் அதற்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் மற்றும உபகரணங்கள் வழங்கவும், மேலும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.   கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ வசதிகள் நகர்ப்புற மக்களுக்கு மட்டுமின்றி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

 சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி  பேசியதாவதுதமிழக அரசு  கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்  நோய் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில்   முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலேயே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கொரோனாவால் பாதிப்படைந்துள்ள மக்களை சந்திக்குமாறும் மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த காலத்தை ஒப்பிடுகையில் இரண்டு இலக்கம் அளவில் குறைந்ததற்கு மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களின் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் காரணமாகவே தொற்று குறைந்துள்ளது.

இந்தியாவில் தமிழகத்தை தவிர எந்த மாநிலமும் கொரோனா மூன்றாம் அலையினை எதிர்கொள்ள இந்த அளவிற்கு தயாராக இல்லை.கொரோனா மூன்றாம் அலை சிறுவர்களை அதிகமாக தாக்கும் என்பதனால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேவையான ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் சிறுவர்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 28 ஐசியு படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் புதுகோட்டை மாவட்டத்தில் இறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலையில் கோவிட் சிகிச்சையில் இருந்து வீடு திரும்பியவர்கள் 15 நாட்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது

இந்த 15 நாட்களுக்குள் கொரோனா அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கை வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.   பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து கோவிட் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றார்  அமைச்சர்  எஸ்.ரகுபதி.

இதையொட்டி   அமைச்சர்கள் 3 பேரும்   புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர்  அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முள்ளூரில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை மையம், திருவரங்குளம் மண்டல பொது சுகாதாரப் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்கிடும் வகையில் பொன்னமராவதி வர்த்தகர்கள் சங்கம் சார்பில்  அளிக்கப்பட்ட ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரிடம்  அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர்.ஜெ.இராதாகிருஷ்ணன்,  மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நிஷா பார்த்திபன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர்  செல்வவிநாயகம், சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர்.வை.முத்துராஜா, எம்.சின்னத்துரை , டாக்டர்.சி.விஜயபாஸ்கர் , முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top