logo
ஸ்டாலின் கனவு கானல் நீராகத்தான் மாறும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

ஸ்டாலின் கனவு கானல் நீராகத்தான் மாறும்: முதல்வர் பழனிசாமி பேச்சு

03/Jan/2021 08:27:03

ஸ்டாலின் அதிமுக அரசை கலைப்பதற்கு எத்தனையோ வழிகளை கடைப்பிடித்தார். ஸ்டாலின் கனவு கானல் நீராகத் தான் மாறும். உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.


தமிழக முதல்வர் பழனிசாமி  இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில், இங்கே கூடியிருக்கின்ற பெரும்பான்மையான மக்கள் வேளாண் தொழில் மற்றும் வேளாண்மை சார்ந்த உப தொழிலில் ஈடுபட்டு வருகிறார். உங்களுடைய வாழ்க்கைத்தரம் உயர்வடைய வேண்டும் என்பதற்காக எங்களுடைய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இன்றைக்கு விவசாயிகளுக்கு என்ன தேவை, விவசாய தொழிலாளர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து, திட்டங்களை தீட்டி வரும் ஒரே அரசு அஇஅதிமுக அரசு.

தேவேந்திர குல சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் என்னை சந்தித்து, தேவேந்திர குல சமுதாய மக்கள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர். அந்தப் பிரிவுகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நான் உடனடியாக இந்திய ஆட்சிப் பணி மூத்த அலுவலர்கள் தலைமையில் குழு ஒன்றை அமைத்து பல சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேசி, இந்த சமூகத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பொது பெயராக வைத்திட அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த பரிந்துரை அறிக்கையினை மத்திய அரசிற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

 

அதற்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும். பல ஆண்டுகளாக அந்த 7 உட்பிரிவுகளையும் இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற இம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்னும் குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றப் படும். நான் சம்பந்தப்பட்ட துறை மத்திய அமைச்சரிடம் பேசி விரைவாக அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள் ளேன். அவர்களும் இந்தப் பணியை ஆரம்பித்து விட்டார்கள். உங்களுக்கு சட்டப்படி தேவேந்திர குல வேளாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும் என்ற செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்டம் ஒரு வறட்சியான மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் பசுமையாகவும், செழிப்பாகவும் ஆக வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு காவேரி – குண்டாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறது. இத்திட்டத்தை பல கட்டங்களாக பிரித்து செயல்படுத்த உள்ளோம். முதல் இரண்டு பிரிவுகளை பிரித்து ஒப்பந்தம் விட்டுவிட்டோம். குறுகிய காலத்திற்குள் இப்பணிக்கு அடிக்கல் நாட்டப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன். காவேரி – குண்டாறு திட்டம் நிறைவேறுகின்ற போது, பரமக்குடியில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பும். இதனால் நிலத்தடி நீர் உயர்வதோடு, வேளாண் பெருமக்களுக்கு தேவையான நீரும், குடிப்பதற்கு தேவையான நீரும் கிடைக்கும். 

இத்திட்டம் 14,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை தொடங்கி நிறைவேற்றி முடிக்கின்ற போது இந்தப் பகுதி மக்கள் செல்வ செழிப்போடு வாழ்வார்கள். எங்களுடைய அரசு எதை சொல்கிறதோ, அதை செய்து காட்டும், செய்து முடிக்கும். நானும் ஒரு விவசாயி. இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றேன். 

விவசாய பணிகள் அனைத்தும் எனக்கு தெரியும். என் தந்தை அடிக்கடி சொல்வார், நீ வேளாண் பணியை பற்றி நன்கு தெரிந்திருந்தால் தான் வேலை செய்பவர்கள் நீ சொல்கிறபடி கேட்பார்கள். இல்லையென்றால் அவர்கள் சொல்கின்றபடி தான் நீ கேட்கவேண்டி இருக்கும் என்று சொல்வார். அதனால் நான் வேளாண் பணிகளை முழுமையாக கற்று, எந்த காலத்தில், எந்த பயிரை பயிர் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன். எந்த வகையான பூச்சி தாக்குதல் வருகிறது, அதற்கு என்ன வகையான மருந்துகள் அடிக்க வேண்டும், எப்படி பயிரை காக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவன். 

ஏன் என்று சொன்னால், வேளாண் பணி என்பது எளிமையான பணி அல்ல.

 இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல் உழைக்க வேண்டிய ஒரே பணி வேளாண் பணி. அத்தகைய வேளாண் பெருமக்களை காப்பதற்காக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள ஏழை எளிய மக்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், புத்தகங்கள், மிதிவண்டிகள் போன்றவற்றை வழங்கினார்கள்.

 விஞ்ஞான கல்வி பெறுவதற்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்கள். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்ற மாணவர்களோடு போட்டிப்போட்டு ஜெயிக்க வேண்டும் என்பதற்காக 12,000 ரூபாய் மதிப்புள்ள மடிக்கணினி 52 லட்சம் மாணவர்களுக்கு அரசு வழங்கி இருக்கிறது.

இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் தான் உயர்ந்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-ஆம் ஆண்டு பதவியேற்கும் போது 100-க்கு 32 சதவிகிதம் பேர் தான் உயர்கல்வி பயின்று வந்தார்கள். அவர் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் தற்போது 100-க்கு 49 சதவிகிதம் பேர் உயர்கல்வி பயின்று வருகிறார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப் பிரம்மாண்டமாக, உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் கிடைக்கக் கூடிய மருத்துவ வசதிகள் அளவிற்கு உங்கள் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கிடைக்கும்.

ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 39 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் அந்த பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். தனியார் மருத்துவமனைக்கு சென்றால் சிகிச்சைக்காக பணம் கொடுக்க வேண்டி வரும். ஆனால் அம்மா மினி கிளினிக்கில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வேண்டுமென்றே அவதூறாக என் மீதும், இந்த அரசின் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி வருகிறார். அவருக்கு உழைத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. குறுக்கு வழியிலே ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதிமுகவை உடைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஸ்டாலினுக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம் எந்த ஒரு அதிமுக தொண்டனையும் தொட்டுப் பார்க்க முடியாது.

 மக்கள் அனைவரும் எங்கள் பின்னால் இருக்கிறார்கள். ஸ்டாலின் அதிமுக அரசை கலைப்பதற்கு எத்தனையோ வழிகளை கடைப்பிடித்தார். அத்தனையும் மக்கள் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது. உண்மையாக உழைப்பவர்கள் தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். நாங்கள் உண்மையாக உழைக்கிறோம். மக்களுக்காக பாடுபடுகிறோம். ஸ்டாலின் அவர்களின் கனவு கானல் நீராகத் தான் மாறும். உங்கள் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று தெரிவித்துள்ளார்.

 


Top