logo
உலக இரத்த தான தினம்... உயிர்காக்கும் சேவையில் புதுக்கோட்டை குருதிக்கூடு...

உலக இரத்த தான தினம்... உயிர்காக்கும் சேவையில் புதுக்கோட்டை குருதிக்கூடு...

14/Jun/2021 02:46:19

புதுக்கோட்டை, ஜூன் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய மிக முக்கிய தானம்இந்த ரத்த தானத்தால் பல உயிர்களைக் காக்க உதவி வருகிறது  புதுக்கோட்டை குருதிக்கூடு அமைப்பு

 ரத்த தான தினத்தில் அதை கடைப்பிடிப்பதன் அவசியத்தை இங்கு காண்போம். ரத்த தானம் மிகவும் சிறந்த தானமாக கருதப்படுகின்றது. ரத்தம் பெறுபவருக்கு மட்டுமில்லாமல், அதை கொடுப்பவருக்கும் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் 14-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ரத்த தான தினம், ரத்தம் தானம் செய்ய வேண்டியதன் அவசியமும், பாதுகாப்பான ரத்த பரிமாற்றம், ரத்தத்திலிருந்து உருவாக்கப்பட்டும் உடலுக்கு தேவையான பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

உலக சுகாதார அமைப்பு (WHO) மூலம் உலக சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 8 முக்கிய விஷயத்திற்காக பிரச்சாரம் செய்துவருகின்றது. அந்த வகையில் உலக காசநோய் தினம், உலக நோய்த்தடுப்பு வாரம், உலக மலேரியா தினம், உலக புகையிலை தினம், உலக ஹெபடைடிஸ் நாள், உலக இரத்த தான தினம், மற்றும் உலக எய்ட்ஸ் தினம்.

ரத்த தானம் ஒரு உயிரைக் காக்கக் கூடிய மிக முக்கிய விஷயம் என்பதால் ரத்த தான விழிப்புணர்வு மிக அவசியமாகிறது.  இளைஞர்கள் சமூகம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்டி வரும் அதே வேளையில், பல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சரியாக பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதன் மூலம் கர்ப்பிணிகளுக்கும், சிகிச்சை பெற சென்றவர்களுக்கு எய்ட்ஸ் பரவியது உறுதி செய்யப்பட்ட செய்திகள் வருகின்றன. இது போன்ற மோசமான மருத்துவ சிகிச்சை தடுக்கும் வகையில் தான் உலக ரத்த தான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

பல உயிர்களை காத்து இணையற்ற  சேவையாற்றி வரும்.. புதுக்கோட்டை குருதிக்கூடு ...

கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக ரத்தம் கிடைக்காமல் தவித்த சக உயிர்களுக்கு உரிய நேரத்தில் இரத்தம் கொடுத்து உதவ வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக குருதிக்கூடு என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பு தொடங்கப்பட்டு தற்போது ஒரு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் தொடர்ந்து தொய்வின்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிரைக் காக்கவும் அவசரம் கருதி வேறு சில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் உயிரைக் காக்கவும் முகமறியா நண்பர்கள் 500-க்கும் மேற்பட்டோர் குருதிக்கொடை அளித்துள்ளனர்.

இதுவரையில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு குறுகிய காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குருதிக்கொடை அளித்திருப்பது  நெகிழச் செய்கிறது. பல்வேறு நண்பர்கள் இந்த அமைப்பு தொடர்ந்து தடையின்றி செயல்பட உறுதுணையாக இருக்கின்றனர்.

அதில், தொடர்ந்து களத்தில் நின்று  ஓய்வின்றி உழைத்து இரத்தக் கொடையாளர்களை குறித்த நேரத்திற்கு அழைத்து வந்து பல உயிர்களை காக்க பாலமாக  செயல்பட்டு வரும் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் மற்றும்  மேட்டுப்பட்டி செந்தில்  உள்ளிட்ட உறுப்பினர்களின்   தன்னலமற்ற சேவைகள் பாராட்டுக்குரியவை.


இக்கட்டான இந்த காலகட்டத்திலும் நாள்தோறும் குறைந்தபட்சம் 5 நபர்களுக்காவது குருதி கிடைத்திட  பல வலிகளை தாங்கிக்கொண்டு, வழிவகை செய்து கொடுத்து பல உயிர்களை காத்து வரும் இந்த  நண்பர்களின் உழைப்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை. அண்மையில் பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ள 5 பேரின் உயிரை காக்க   7 நண்பர்களை குறித்த நேரத்திற்கு அழைத்துவந்து குருதிக்கொடை அளிக்க வைத்து உரிய நேரத்தில் உன்னத உதவி புரிந்துள்ளனர்உதிரம் கொடுப்போம்.. உயிர்களை காப்போம்..என்கிற அடிநாதத்துடன்  உயிர் காக்கும் சேவையாற்றும்  குருதிக்கூடு அமைப்பின் முகமறியா நண்பர்களை வணங்கி வாழ்த்துகின்றன  பல உயிர்கள்.  

Top