logo
அக்டோபர்  30- உலக சிக்கன நாள்

அக்டோபர் 30- உலக சிக்கன நாள்

30/Oct/2020 10:11:07

சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி உலக சிக்கன தினம் (Word Thrift Day) கொண்டாடப்படுகிறது. சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் 1924-இல் இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மகாநாட்டில் உலக சிக்கன தினம் என்ற தினம் கொண்டாப்பட வேண்டும் .

எனவும், இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. 


 இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது. இவ்வுலகம் யாருக்கு இல்லை என்பதை திருக்குறளில் வள்ளுவர்  பொருள்இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று வலியுறுத்துகிறார். எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுக சேமிப்பது நடைமுறையிலுள்ள பழக்கமாகும். பிடியரிசி எமது தாய்மாரிடையே பண்டைக் கால முதல் இருந்துவந்த பழக்கமாகும். இந்தப் பழக்கம் சிக்கனத்தையும், அதே நேரம் சேமிப்பையும் வழியுருத்தி நிற்கின்றது.

 தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராவார். பல விஞ்ஞான சாதனங்களைக் உலகுக்குத் தந்தவர். அவர் தனது சக்திகளை ஒரு முனைப்படுத்தியதோடு, பணத்தை சேமிப்பதைப் பழக்கமாக்கிக் கொண்டிருந்தார். இந்த சேமிப்பு மட்டும் இல்லாதிருந்தால் அவர் வெளியுலகத்திற்குத் தெரியப்படாமலேயே இருந்திருப்பார் என தற்போதைய சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், சேமித்த பணமே அவரின் சாதனைகளை உலகம் அறியச் செய்தது. அவரைப் புகழேணிக்கு ஏற்றியது. ஆல்வா எடிசனின் இந்த அனுபவம் அனைவருக்கும் ஒரு படிப்பினையாகும். 

சிக்கனம் என்பதை முதலில் வைத்திருக்கிறேன். சிந்தனையை அதற்கு அடுத்து வைத்திருக்கிறேன். ஆகவே, இந்த முறையிலே அந்தச் சிக்கனம், சிந்தனை, சிறந்த பண்பு, சீர்த்திருத்தமுடன் வாழ்வு, துணிவு இவை வேண்டும். அப்படி வேண்டுமானால் குடும்பத்தில் ஒருவர் மட்டும் சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் என்று இருந்தால் போதுமா, போதாது. இதை உணர்ந்து ஒத்துக் கொள்ளக் கூடிய இருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் குடும்பத்திலே அமைதி இருக்கும், சீர்திருத்தம் பரவ முடியும், சிக்கனம் நிலைக்க முடியும், நலம் பெற முடியும். 

எனவே, அந்த முறையிலே சிக்கனம், சிந்தனை, சீர்திருத்தம் இவை எல்லாம் குடும்பத்தில் நிலவ வேண்டுமானால்இ அந்தச் சிந்தனையாற்றல் பெருகுவதற்கு மனவளம் தான் வேண்டும், என்று ஒரு முறை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் குறிப்பிட்டார்கள். இது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கருத்தாகும். தனிப்பட்ட நபராகவன்றி குடும்பமாக வாழ்பவர்கள் அதிகம் கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். செலவு செய்வதில் முக்கியமாக நான்கு நிலைகள் இருப்பதனை இனங்காட்டலாம்.

கஞ்சத்தனம்,  சிக்கனம்,  ஆடம்பரம்,  ஊதாரித்தனம். கஞ்சத்தனம் என்பது தேவையான அன்றாடச் செலவுகளுக்குக் கூடப் பணம் செலவு செய்ய மனம் வராமல் வீணாகப் பூட்டி வைத்து மகிழ்வது. கஞ்சத்தனம் என்பது சமூக வாழ்க்கைக்கு உகந்ததல்ல. கஞ்சத்தனம் மிகைக்கும்போது குறித்த மனிதனுக்கு தன் வாழ்க்கையையே அனுபவிக்க முடியாமல் போகலாம். 

சிக்கனம் என்பது தேவையில்லாதவை என்று நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டுத் தேவையான செலவுகளை மட்டும் நல்ல முறையில் செய்வது. பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனீ, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும, சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும். 

ஒரு மனிதன் சேமிப்புப்புக்குப் பழகிக் கொள்ளும்போது அச்சேமிப்பு எதிர்காலத்தில் பல விடயங்களுக்கு அவனுக்கு கை தரப்போதுமாகும். ஆடம்பரம் என்பது, அண்டை வீட்டாரும் மற்ற உறவுக்காரர்களும் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக, வகையறியாமல் நடை உடைபாவனைகளில் மெருகேற்றிக் கொண்டு வெளித் தோற்றத்துக்காகச் செலவிடுவது. இது தம்மை பணம் பொருள் படைத்தவர்கள் என இனங்காட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும்.

 அடுத்தவனைப் போல தானும் வாழ வேண்டும் என்ற உணர்வு சிலநேரங்களில் அவனை பல தவறான வழிகளுக்கு இட்டுச் செல்வதையும் அனுபவ வாயிலாக நாம் காண்கிறோம். ஊதாரித்தனம் என்பது எந்தவிதப் பயனும் இன்றி, கட்டுக் கடங்காமல் வீணாக மனம் போனவாறெல்லாம் தம்முடைய சக்திக்கு மீறிச் செலவிடுவது.

சிக்கன வாழ்க்கைக்கு அடிப்படை எளிமை போதுமென்ற மனம் இவைதாம். பொதுவாகச் செலவுகளை எல்லாம் நம்முடைய நியாயமான வருமானத்துக்குள் மட்டுப்படுத்திக் கொள்ளப் பழக வேண்டும். அப்படி இல்லாமல் வரவை மீறிச் செலவு செய்வது என்று வந்து விட்டால் எத்தனை நல்ல பண்புகள் இருந்தாலும் ஒவ்வொன்றாய் அவற்றை இழந்துவிட நேரும்.

ஆடம்பரம், ஊதாரித்தனம் என்பன மனிதனை அழித்துவிடக்கூடிய சக்திமிக்கவை. தமது வருமானத்தை விட அதிகமான செலவுகள் செய்யும்போது மனிதன் ஒரு கடனாளியாக அல்லது சட்டத்தால் நிராகரிக்கப்பட்ட விடயங்களை செய்யக்கூடிய ஒருவராக மாறி வி;டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகவும் இருக்கலாம். 

பொதுவாக நாட்டார் வழக்கில் விரலுக்குத் தக்க வீக்கம் வேண்டும் என்பார்கள். ஆடம்பரம், ஊதாரித்தனம் அதிகரிக்கும்போது விரலை மிஞ்சிய வீக்கம் சில சமயங்களில் விரலையே செயலிழக்கச் செய்துவிடலாம். . நவீன உலகில் முறைகள் மாறினாலும் அடிப்படையை நோக்கினால் நாம் காண்பது மனிதனின் மனோநிலையைத் தான். ஊதாரித்தனமான செலவு என்ற மனோநிலையை மாற்றி, தேவைக்கேற்ற செலவு என்ற மனோநிலையைக் கொண்டால் சேமிப்பது நிச்சயம்.  

கடன் வாங்குபவனாகவும் இருக்காதே. கொடுப்பவனாகவும் இருக்காதே,. ஏனெனில் பண இழப்போடு நண்பனையும் இழக்கச் செய்யும் கடன். அத்தோடு குடி வாழ்க்கையின் சீர்மையையும் மழுங்கடிக்கச் செய்யும் அது என்பதே இதன் பொருள். தனிப்பட்ட வாழ்க்கைக்கு சேமிப்பு, சிக்கனம் எவ்வளவு முக்கியமோ அதேபோல இந்த சேமிப்பும், சிக்கனமும் தேசிய ரீதியிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. 

சேமிப்பு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

அரச அங்கீகாரம், பாதுகாப்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன. தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பு எனும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், பொருளாதார சுதந்திரத்திற்கும் மிக அடிப்படையாக காரணிகளுள் ஒன்றாகும். சேமிப்பு சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. சிக்கனம் என்பது வளங்களை மிக கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கனம் என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, குடும்ப மட்டத்திலும் சரி, தேசிய மட்டத்திலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும். 

 நாட்டுக்கு நாடு பல்வேறுபட்ட வகைகளில் பல்வேறுபட்ட கோணங்களில் சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றது. இது மட்டுமன்றி சிறு வயதிலே சிறார்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் தனிப்பட்ட சேமிப்பினையும், சிக்கனத்தையும் புகட்டக்கூடிய பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் மாணவர்களின் பாடப்பரப்புகளினூடாகவும் தேசிய பொருளாதார நெருக்கடிகள் அந்த நெருக்கடிகள் சேமிப்பினதும், சிக்கனத்தினதும் முக்கியத்துவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நவீன இக்காலகட்டத்தில் சிக்கனம், சேமிப்பு எனும் வார்த்தைப் பதங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை அலகில் அல்லாமல் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் முதன்மைப்படுத்தப்படுவதை நாம் அவதானிக்கின்றோம். மேற்குறிப்பிட்ட நிலைப்பாடுகளை உலக சிக்கன தினமான இத்தினத்தில் கருத்திற் கொள்வோமாக.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  30-ஆம் தேதி உலக சிக்கன நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  மாணவ,  மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சிறுசேமிப்பு பண்பினை வளர்த்தால் அவை அனைவருக்கும் சென்றடையும்சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். சிறுகச்சிறுக சேர்க்கும் பழக்கத்தை மாணவப்பருவத்திலேயே நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

காசு பணத்தை மட்டுமல்ல,  நல்ல எண்ணங்களை,  சிந்தனைகளை,  தன்னம்பிக்கையை,  பிறருக்கு உதவும் மனப்பாங்கை  மனித நேயத்தையும்  உங்கள்  மனதில்  சிறுகச் சிறுக  சேர்த்து  வைத்துக் கொள்ள வேண்டும்.  சிறு  சேமிப்பு  பழக்கம்  என்பது  தேவையில்லாத  தீய  பழக்க வழக்கங்களை  நம்மிடமிருந்து  புறந்தள்ளக்கூடிய  ஒரு  சிறந்த வழி முறையாகும்.

எனவே,  மாணவ-மாணிவகளாகிய  நீங்கள்  அனைவரும் சிறுசேமிப்பு  பழக்கத்தை  தொடர்ந்து  கடைபிடிப்பதோடு  உங்கள்  உற்றார் உறவினர்  நண்பர்களுக்கும்  கற்றுக் கொடுங்கள்.  தகவல்:   டீலக்ஸ்  ஞானசேகரன் , புதுக்கோட்டை .

,


Top