logo
ஹைட்ரோகார்பன் எடுக்க மீண்டும் மத்திய அரசு முயற்சி: போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்.

ஹைட்ரோகார்பன் எடுக்க மீண்டும் மத்திய அரசு முயற்சி: போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்.

13/Jun/2021 02:07:33

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மீண்டும் மத்திய அரசு முயற்சி செய்வதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

 புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் கடந்த 2017 -ம் ஆண்டு பிப்.15-ம் தேதி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

 இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால், திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு  உள்ளிட்ட  பகுதிகளில்  200 நாள்களுக்கு மேல் தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து,  நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததுஇந்த அறிவிப்புக்கு பின்னர், ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் இப்பகுதியில் செயல்படுத்தப்படாது என விவசாயிகள் நிம்மதி அடைந்திருந்தனர்.

 இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கருவட தெரு உள்பட நாடு முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு 10 -ம் தேதி ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதுஇந்த தகவல் அப்பகுதி விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 இத்திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வட தெருவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின்  ஓஎன்ஜிசி  நிறுவனம் மூலம் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.ஆரோக்கியசாமி தலைமையில் விவசாயிகள் அரை நிர்வானமாக நின்றவாறு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், நெடுவாசல் போராட்டத்தைப்போல, மற்றொரு தொடர் போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Top