logo
தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று முதல் அமல்: புதுக்கோட்டையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் திறப்பு

தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் இன்று முதல் அமல்: புதுக்கோட்டையில் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் திறப்பு

07/Jun/2021 06:20:56

புதுக்கோட்டை, ஜூன்:  தமிழகம் முழுவதும் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் திங்கள்கிழமை (ஜூன் 7) முதல் அமலுக்கு வந்துள்ளதுஇதை யடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில்  கடந்த இரு வாரங்களாக அடைக்கப்பட்டிருந்த மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

 

அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில்   தனியாா் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள இணைய பதிவுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் மற்றும் தச்சா் போன்ற சுயதொழில் செய்பவா்கள் இணையப் பதிவுடன் பணிபுரியவும்  அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

 

இதனால், புதுக்கோட்டை கீழராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி, தெற்கு 4-ஆம் வீதி, புதிய பேருந்து நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்பொருள்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயா்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள். ஹாா்டுவோ் விற்பனைக் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், கல்விப் புத்தகங்கள், எழுது பொருள்கள் விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதே போல் சாலையேரங்களில் பழக்கடைகளும் வைக்கப்பட்டிருந்தன. புதிய பேருந்து நிலையத்தில் காய்கனி வியாபாரமும் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரில் காலை 6 முதல் பகல் 12 மணி வரை நகரின் முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் சுமாராகவே இருந்தது. பிற்பகலில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அரசின் அறிவிப்பின்படி மாலை 5 மணிக்கு  தளர்வு அளிக்கப்பட்ட அனைத்து கடைகளுக்கு முறையாக அடைக்கப்பட்டன.  

வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணையப் பதிவுடன் செல்லவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களிடம் இருந்து இணைய அனுமதிச் சீட்டு (-பாஸ்) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்தின் தளா்வுகளை மக்கள் தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அறிவுறுத்தியுள்ளன..

 

                                                   

Top