logo
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 230 கடைகளுக்கு சீல் வைப்பு

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 230 கடைகளுக்கு சீல் வைப்பு

20/May/2021 05:05:19

ஈரோடு, மே: ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 10 நாட்களில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 230 கடைகளுக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

 ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத் துறையினர் ஒருங்கிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கி மீறி செயல்படும் கடைகள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத கடைகளை மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்து பூட்டி சீல் வைத்து தலா ரூ 5,000 அபராதம் விதித்து வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நான்கு மண்டலத்திலும் உள்ள கடைகளில் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர். இதன்படி கடந்த 10- ம் தேதி முதல் நேற்று வரை மாநகர் பகுதியில் தடையை மீறி செயல்பட்ட கடைகள், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகள் என 230 கடைகளுக்கு தலா ரூ 5,000 அபராதம் விதித்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.11 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.கடையின் உரிமையாளர்கள் அரசின் விதிகளை பின்பற்றி முதல் முறையாக தவறு செய்பவர்களாக இருந்தால் மூன்று நாட்களுக்குள் அந்தக் கடை மீண்டும் இயங்க  அனுமதி அளிக்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணைர் மா. இளங்கோவன் கூறியதாவது: அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடந்தால் கொரோனா கட்டுக்குள் வந்துவிடும். ஆனால் சிலர் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு கடைகளை திறந்து வைப்பதாலும், தடையை மீறி கடைகளை திறக்க வைப்பதாலும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுபோன்ற கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி 4 மண்டலங்களிலும் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 10 நாட்களாக மாநகராட்சி பகுதிகளில் 230 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

முதல் தடவை தவறு செய்தவர்கள் என்றால் எச்சரிக்கை விடுத்து மூன்று நாட்களில் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் அடிக்கடி கொரோனா கட்டுப்பாட்டை மீறும் நபர்கள் என்றால் அதற்கு தக்கபடி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.

Top