logo
செயலாராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்த  105 தொடக்க ,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்

செயலாராய்ச்சி முடிவுகளை சமர்ப்பித்த 105 தொடக்க ,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்

05/Mar/2021 11:41:17

புதுக்கோட்டை,மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் 105 தொடக்க, நடுநிலைப் பள்ளி  ஆசிரியர்கள் தாங்கள் மேற்கொண்ட  செயலாராய்ச்சி முடிவுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பித்தனர்.  


இதற்கான ஒப்படைப்பு பணி நிகழ்வு மார்ச் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் பி.நடராஜன் கூறியதாவது: ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்தவும் வகுப்பறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தர்க்க முறையில் தீர்வு காணவும்.

மாணவர்களிடையே காணப்படும் கற்றலில் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் செயலாராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் பணித்திறன் மிக்க 105 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி வழங்கி 105 செயலாராய்ச்சி மேற்கொள்ள பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கி இருந்தோம்.

அவர்களும் தங்களது வகுப்பறையில்  ஒரு மாத காலமாக செயலாராய்ச்சி மேற்கொண்டு வந்தனர்.தற்பொழுது அவர்கள் மேற்கொண்ட செயலாராய்ச்சி முடிவுகளை புதுக்கோட்டை,கந்தர்வக்கோட்டை, திருமயம், கறம்பக்குடி, அரிமளம், மணல்மேல்குடி ,அறந்தாங்கி ஒன்றிய ஆசிரியர்கள் மார்ச் 4 -ஆம் தேதியும், அன்னவாசல், குன்றாண்டார்கோவில், ஆவுடையார் கோவில்,விராலிமலை,பொன்னமராவதி,திருவரங்குளம் ஒன்றிய ஆசிரியர்கள் மார்ச் 5 -ஆம் தேதியும்  ஒப்படைத்துள்ளனர் என்றார்.


செயலாராய்ச்சி முடிவுகளை புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் அன்புச் செழியன்,புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் முனைவர் அய்யாவு ஆகியோர்  சரிபார்த்தனர்.


செயலாய்வின் மேலாய்வளர்களாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வியாளர்கள்முருகன், ஆனந்தராஜ், ராஜ்குமார், மாரியப்பன், திருமுருகன், நாராயணன், தங்கராசு, தனசேகரன், பழனிச்சாமி, முத்துக்கருப்பன், மீனாட்சி, புவனேஸ்வரி, சங்கரன், கோபாலகிருஷ்ணன், சியாமளா ஆகியோர் செயல்பட்டனர்.

பயிற்சியில் கலந்து கொண்ட 105 ஆசிரியர்களுக்கும் செயலாராய்ச்சி மேற்கொண்ட தற்கான செலவினத் தொகை வழங்கப்பட்டது.பயிற்சியின் ஒருங்கிணைப்பாளராக முனைவர் எம்.இராஜ்குமார் செயல்பட்டார்.முதுநிலை விரிவுரையாளர் நாராயணன் வரவேற்றுப் பேசினார். முதுநிலை விரிவுரையாளர் எம்.மாரியப்பன் நன்றி கூறினார். 


Top