logo
 கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகும் குழந்தைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை – டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் எச்சரிக்கை

கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகும் குழந்தைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் கடும் நடவடிக்கை – டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் எச்சரிக்கை

21/May/2021 12:02:52

கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகும் குழந்தைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் எச்சரித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் பல குழந்தைகள் ஆதரவற்றவர்களாக ஆகி உள்ளனர். இதுபற்றி அந்த குழந்தைகளின் புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெற்றோரை இழந்து ஆதரவற்று போன குழந்தைகளின் மனதை உருக்கும் நிகழ்வுகளை வெளிப்படுத்தி நன்கொடை வழங்குமாறு கோரிக்கைகள் விடுப்பதும், தத்தெடுப்பதற்கான வேண்டுகோள்களை செய்வதும் சட்டத்தை மீறும் செயல் களாகும்.

இது குழந்தைகள் தவறான நோக்கத்திற்காக கடத்தப்படுவதற்கு வழிவகுக்கக் கூடும். கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத குழந்தைகள் பற்றி தெரிந்தால் காவல் துறைக்கு அல்லது உங்கள் மாவட்டத்தில் குழந்தை நல வாழ்வு குழுவிற்கு தகவல் அளிக்க வேண்டும்.

இல்லையெனில் சைல்டு லைன் ஹெல்ப் 1098  எண்ணின்  தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதையும் மீறி தகவல்களை பரப்புபவர்கள் மீது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் ஒரு குழந்தையை விற்க அல்லது வாங்குகிற செயலில் ஈடுபடுபவர்கள் மீது 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

Top