logo
கொரோனா அறிகுறி: வீடுகளிலேயே பரிசோதனை செய்ய 10 ஆட்டோக்களில் லேப் டெக்னீசியன்கள் நியமனம் ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

கொரோனா அறிகுறி: வீடுகளிலேயே பரிசோதனை செய்ய 10 ஆட்டோக்களில் லேப் டெக்னீசியன்கள் நியமனம் ஈரோடு மாநகராட்சி ஆணையர் தகவல்

06/Jun/2021 06:36:52

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், சளி, காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி உடையவர்களை கண்டறிய வீடு வீடாக சென்று களப்பணி மேற்கொள்ளப்பட்டு, அதில் அறிகுறி உடையவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை 200 மாநகராட்சி பணியாளர்கள், 1,200 தன்னார்வலர்கள் என 1,400 பேர் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது: ஈரோடு மாநகரில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு தொற்றினை கட்டுப்படுத்தவும், பரவாமல் தடுக்கவும் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி போன்ற அறிகுறி உடையவர்களை கண்டறிந்து அவர்களது விவரங்கள் களப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.


பின்னர், அறிகுறி உடையவர்களுக்கு அன்றைய தினமே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதன் முடிவுகள் வரும் வரை அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி விடுகிறோம். பரிசோதனை முடிவில் தொற்று கண்டறியப்பட்டால் அரசு மருத்துவமனைக்கும், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களுக்கும் அனுப்பி வைக்கிறோம். அல்லது அவர்கள் விருப்பத்தின் பேரில் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைக்கிறோம்.

அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். மருத்துவமனை வெகுதூரம் இருப்பவர்கள், வெளியே வர முடியாதவர்களுக்கு மாநகராட்சி சார்பில் அவர்களது வீடுகளிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாநகராட்சியில் 10 ஆட்டோக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆட்டோக்களிலும் ஒரு லேப் டெக்னீசியன்கள் இருப்பார்கள். இதேபோல் 10 தூய்மை ஆய்வாளர்கள் இதற்கு பொறுப்பேற்று அறிகுறி உள்ளவர்கள் வீட்டுக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற் கொள்வார்கள். இந்த முடிவு ஒருநாளில்  வந்துவிடும். இவ்வாறு வீடுகளிலேயே பரிசோதனை செய்வதால் பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைச்சல் மிச்சம் ஆகும் என்றார் அவர்.

Top