logo
ஆக்கிரமிக்கப்பட்ட குளம், மயானக்கொட்டகை, பள்ளி: மீட்டுத்தரக்கோரி சிபிஎம் காத்திருக்கும் போராட்டம்

ஆக்கிரமிக்கப்பட்ட குளம், மயானக்கொட்டகை, பள்ளி: மீட்டுத்தரக்கோரி சிபிஎம் காத்திருக்கும் போராட்டம்

13/Feb/2021 04:28:33

புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த குளந்திரான்பட்டு ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட குளம், மயானக்கொட்டகை மற்றும் பள்ளிக்கூடத்தை மீட்டுத்தரக்கோரி கறம்பக்கடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.

கறம்பக்குடி தாலுகா, குழந்திரான்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுவான்பிறை கிராமத்தில் புதுக்குளத்தை தனிநபர் ஆக்கிரமித்து  பண்ணைக்குட்டை அமைத்துள்ளதாகவும், மயான கொட்டகை இடித்து ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்குள்ள தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் பேரில் பட்டா போட்டுள்ளதாகவும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. காத்திருக்கும் போராட்டத்திற்கு ஆர்.கிரு~;ணன், ஏ.கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர். 

போராட்டத்தில் கலந்துகொண்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, ஒன்றியச் செயலாளர் த.அன்பழகன் ஆகியோர் கண்ட உரையாற்றினர். ஓன்றியக்குழு உறுப்பினர்கள் வி.மணிவேல், எம்.பழனியப்பன், டி.அரிபாஸ்கர், எஸ்.முருகதாஸ், எம்.மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய கறம்பக்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மயானக் கொட்டகையை அகற்றியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வது எனவும், போலீயாக போடப்பட்ட பட்டாவை ரத்துசெய்ய நடவடிக்கை எடுப்பது எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Top