logo
சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு அளித்த புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர்

சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை மனு அளித்த புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர்

30/May/2021 12:42:17

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் தமிழக சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே நிர்வாகிகளின் வேண்டுகோளை  ஏற்று நிர்வாகிகளை அமைச்சர் மெய்யநாதன்  சந்தித்தார். 

பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக அரசுக்கு  சங்க நிர்வாகிகள் சா. ஜெயப்பிரகாஷ், சு. மதியழகன், கே. சுரேஷ், பகவத்சிங்,  ஆர். மோகன்ராம் , அ. பார்த்திபன் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்தனர்.

அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பத்திரிகையாளர்களில் விடுபட்டுள்ள  அனைவருக்கும் வீட்டு மனை வழங்க வேண்டும்.  தாலுகா செய்தியாளர்களுக்கும் அரசின் நிவாரணத் தொகை ரூ.5,000  வழங்க வேண்டும்.   அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசின் அங்கீகார அட்டை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் மாநில பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனுவை படித்துப் பார்த்த அமைச்சர்  மெய்யநாதன் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற  முயற்சி செய்வதாகவும், முதல்கட்டமாக பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்க  துரித நடவடிக்கை எடுப்பதாகவும் சங்க நிர்வாகிகளிடம்  தெரிவித்தார்.


Top