logo
ஈரோடு மாநகர் பகுதியில் முழு முடக்கத்தை மீறி வெளியே சுற்றிய  187 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு மாநகர் பகுதியில் முழு முடக்கத்தை மீறி வெளியே சுற்றிய 187 வாகனங்கள் பறிமுதல்

20/May/2021 05:20:25

ஈரோடு, மே: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் முழு முடக்கத்தை மீறி வெளியே சுற்றிய  187 வாகனங்களை போலீஸார்  பறிமுதல் செய்து வழக்குப்பதிந்தனர்.

 கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஊரடங்கின் போது சிலர் வாகனங்களில் வெளியே  சுற்றி வந்தனர். ஈரோடு மாவட்டத்திலும் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் சர்வசாதாரணமாக வெளியே சுற்றி வந்தனர். இதையடுத்து ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட எஸ்.பி- தங்கதுரை ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள்   மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று  எச்சரித்தார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் ஊரடங்கை மீறியதாகவும், முக கவசம் அணியாமல் வந்ததாகவும், சாலை விதிமுறைகளை மீறியதாகவும் என மொத்தம் 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 187 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Top