logo
தீத்தொண்டு வாரம்: புதுக்கோட்டையில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

தீத்தொண்டு வாரம்: புதுக்கோட்டையில் தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரம்

22/Apr/2021 07:13:12

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டையில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு  புதுக்கோட்டை யில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர்   பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 

 தீயணைப்புத்துறை சார்பில் ஏப்ரல்14 -ஆம் தேதி முதல் 20 -ஆம் தேதி வரை தீத்தொண்டு வாரவிழா அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி கடந்த 14 -ஆம் தேதி  புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் உள்ள நினைவு தூணில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து புதுக்கோட்டை தீயணைப்புத்துறை சார்பில் புதுக்கோட்டை பழைய பேருந்து  நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி, பிருந்தாவனம், டிவிஎஸ் கார்னர், புதிய பேருந்து நிலையம் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங் களை பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு நிலைய அலுவலர் எஸ்.ஆர். ராஜாஜசோழன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விநியோகித்தனர்.

 

 இந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தில் எளிதில் தீப்பற்றி எரியும் பொருட்களை வீடுகளில் சேமித்து வைக்க கூடாது. மின்சார தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். தரமான ஐ.எஸ்.ஐ. முத்திரையிட்ட மின் வயர்களை பயன்படுத்த வேண்டும். கடைகள், அலுவலகங்கள் மற்றம் வர்த்தக நிறுவனங்களை மூடும்போது பலமுறை கவனத்துடன் பார்வையிட்டு மின் இணைப்பு துண்டித்து விட்டு மூட வேண்டும். கடை பாதுகாப்பிற்கு இரவில் ஒரு காவலரை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி இருந்தன.

 இதையொட்டி, புதுக்கோட்டை டிவிஎஸ். தொழிலகம் மற்றும் முத்துமீனாட்சி மருத்துவமனை ஆகிய இடங்களில்  பணியாற்றும் ஊழியர்களுக்கு  தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயை  அணைக்கும் வழிகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில்,நிலைய அலுவலர்  எஸ்.ஆர். ராஜராஜசோழன் மற்றும்  தீயணைப்பு வீரர்கள்  கலந்து கொண்டனர். 


Top